...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
மார்கழி மாத மகிமை...
காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து ...
இதனை "பீடுடை மாதம்" என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து 'பீடைமாதம்' என்று வழக்கில் வந்துவிட்டது. "பீடுடை மாதம்" எனில் சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம் என்று பொருள்.
இன்னொரு விதக் கணக்குக்குச் சாந்த்ரமானம் என்று பெயர். சந்த்ரனை வைத்து கணக்குப் பண்ணுவதால் அப்படிப் பெயர். அதன்படி ஒரு க்ருஷ்ண பக்ஷம் ‘ப்ளஸ்’ ஒரு சுக்ல பக்ஷத்திற்கு எத்தனை நாள் பிடிக்கிறதோ அது ஒரு மாஸம். பெரும்பாலும் ஒரு க்ருஷ்ண பக்ஷ ப்ரதமையிலிருந்து அடுத்த க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை என்றே சாந்த்ரமானக்காரர்கள் அநுஸரிக்கிறார்கள். வடக்கே ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை ஒரு மாஸம் என்று வைத்துக் கொள்வதும் இருக்கிறது.
தமிழ் தேசத்தில் இந்தச் சாந்த்ரமான வழக்கே ரொம்ப காலத்துக்கு முன்னால் இருந்ததால்தான் மாஸத்திற்கே ‘திங்கள்’ என்று சந்த்ரனின் பெயரைக் கொடுத்திருக்கிறது.
இதில் எந்த நக்ஷத்திரம் ஒரு பௌர்ணமியன்று சந்திரனுக்குக் கிட்டேயிருக்கிறதோ அதன் பெயரையே அந்த மாஸத்திற்குப் பெயராக வைத்திருக்கிறது. சித்ரா நக்ஷத்திரம் பூர்ணிமை சந்திரனுக்குக் கிட்டேயுள்ள மாஸம்தான் சித்திரை, வைகாசம் அப்படி இருப்பது வைகாசி, தமிழில் அந்த நக்ஷத்ரப் பெயர்கள் ரொம்பவும் ரூப பேதம் (உருமாற்றம்) அடைந்து ‘ப்ரோஷ்டபதி’ என்ற நக்ஷத்ரப் பெயரிலான மாஸம் ‘புரட்டாசி’, ச்ராவண நக்ஷத்ர மாஸம் ‘ஆவணி’, ‘தைஷ்யம்’ என்பது ‘தை’ என்று இப்படியெல்லாம் ஆகியிருப்பதில்தான் ‘மார்க்கசீர்ஷம்’ என்பது ‘மார்கழி’ என்றாகியிருக்கிறது.
தாரா (தாரகை) மண்டலத்தில் ‘நக்ஷத்ரங்கள்’ என்று பிரதானமாக இருக்கிற இருபத்தேழும், ராசிக்கு இரண்டே கால் நக்ஷத்ரம் வீதம் பன்னிரண்டு ராசிகளில் கவர் ஆகி விடுகின்றன. ஒரு பூர்ணிமை நக்ஷத்திரத்திற்கு அடுத்த பூர்ணிமை நக்ஷத்ரம் இரண்டே கால் நக்ஷத்ரம் தள்ளி அடுத்த ராசியைச் சேர்ந்ததாக இருக்கும். இப்படி இருப்பதால் இங்கேயும் பன்னிரண்டு பூர்ணிமைகளில் – அதாவது பன்னிரண்டு மாஸத்தில் ஒரு வருஷ காலம் பூர்த்தியாகிவிடுகிறது….
மலமாஸம், அதிக மாஸம் என்று ரொம்ப detail-ல் போகாமல் சொல்லிக் கொண்டு போகிறேன்….
ஸௌரமானப்படி மேஷ மாஸம் என்பது இங்கே சித்திரை மாஸம். ரிஷப மாஸம் என்பது வைகாசி மாஸம். இப்படியே ஸௌரமான தநுர் மாஸம்தான் சாந்த்ரமான மார்க்கசீர்ஷமாகிற மார்கழி.
சிவ-விஷ்ணு அபேதம் போல் சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுவதாக ஈச்வரனுக்கு முக்யமான திருவாதிரை, பெருமாளுக்கு முக்யமான வைகுண்ட ஏகாதசி ஆகிய இரண்டு உத்ஸவங்களும் இந்த மாஸத்திலேயே வருவதால்தான் பகவத் கீதை விபூதி யோகத்தில், தாம் மாஸங்களில் மார்கழி என்று பகவான் சொல்கிறார் என்று தோன்றியதைச் சொன்னேன்.
காலத்தை கணக்கிடுவதற்கு என சில அளவு கோல்கள் உள்ளன. வருடம் அயனம், மாதம், பக்ஷம், வாரம் என்பவை நடைமுறையில் உள்ளன. ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள் எனவும், இரண்டு அயனங்கள் எனவும் கணக்கிட்டுள்ளனர். இரண்டு அயனங்களும் முறையே உத்தராயணம், தக்ஷிணாயணம் என்று பெயர்.
தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள ஆறு மாதங்களுக்கு உத்தராயணம் எனவும் ஆடி மாதம் முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதங்களுக்கு தக்ஷிணாயனம் எனவும் பெயர்.
மனித இனத்திற்கு கால அளவு உள்ளது போன்றே தேவர்களுக்கும் கால அளவு உண்டு. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதாவது ஒரு பகல் ஒரு இரவு. தை முதல் ஆனி மாதம் முடிய உள்ள உத்தராயணம் என்பது தேவர்களின் பகல். ஆடி முதல் மார்கழி முடிய உள்ள தக்ஷிணாயனம் என்பது தேவர்களின் இரவு.
இரவின் கடைசீ பகுதியாகிய விடியற்காலை நேரமாக தேவர்கட்கு அமைவது மார்கழி மாதம். எந்த ஒரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுத்த திட்டம் தீட்டும் நேரம் விடியற்காலையாக அமைந்தால் அமைதியாக சிந்திக்கவும் சிந்திப்பதற்கு ஏற்ப செயல் படுத்துவதற்குண்டான வழி முறைகளை அமைப்பதற்கும் நல்ல சூழ்நிலையாக இந்த விடியற்காலை அமையும்.
அதோடு மேற்கொள்ள இருக்கும் செயலுக்கு விடிவும் நன்கு புலப்படும். இந்த நேரத்தில்தான் சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்ற நேரம் என்பார்கள். அப்போது படித்தால் படித்தது மனதில் பசுமரத்தாணிபோல் நன்கு பதிந்து இருக்கும் என்பதை அநுபவ பூர்வமாக உணர்ந்து தெரிவித்துள்ளனர் நமது முன்னோர்கள்.
தூங்கி எழும்போது இறைவனின் நினைவோடு எழ வேண்டும் என்பது மறபு. "உத்திஷ்ட சிந்திய ஹரிம்"என்று ஒரு வாக்கு உள்ளது. மனிதனின் ஒரு நாள் துவக்கம் இறை சிந்தனையோடு துவங்கினால் அந்த நாள் முழுவதும் பயனுள்ளதாக அமையும்.
தேவர்களின் ஒரு நாளின் துவக்கம் மார்கழி மாதத்தில் அமைவதால் அந்த நேரத்தில் தேவதா சிந்தனையுடன் மனிதனும் தன் வாழ்நாளில் நாளினை துவக்க வேண்டும் என்று விதித்துள்ளனர். ஆகையினால்தான் பகவானும், மார்கழி மாதமாக நான் இருக்கிறேன் என்பதின் நோக்கம், அந்த மாதம் முழுதும் என் நினைவாக இருந்து உனது செயலை துவக்கினால், எடுத்துக்கொண்ட செயல் யாவிலும் என் அருளால் வெற்றி பெற்று பயனுருவாய் என்று அருள்கின்றார்.
இந்த மாதத்தை "நோன்பு மாதம்" என்றும் சொல்வதுண்டு. பாவையர் நோன்பிலிருந்து நல்கணவனைப் பெறுவார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. மார்கழியில் பாவையர் நோன்பிருந்து வழிபட தை பிறந்தவுடன் அவர்களின் விரதத்தின் பயனாக நல்லதொரு வழி பிறந்து அவர்களின் நோக்கம் நிறைவேறும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
மார்கழி மாதத்தில் இறைவனை வணங்கி வழிபட்டு நோன்பிருந்து பயன் பெற வேண்டி இந்த மாதத்தை இறை உணர்விற்கும், பக்திக்கும் என ஒதுக்கியுள்ளார்கள்.
ஆகையால்தான் இந்த மாதத்தில் திருமணங்கள் செய்வதில்லை. இந்த மாதத்திற்கு மற்றொரு ஏற்றம். மிகவும் பக்தி சிறோன்மணியாவும், தன் எஜமானனைத் தொழுபவர்கள் துன்பத்தை எல்லாம் துடைத்தருளும் வள்ளலாகவும் விளங்கும் ஆஞ்சநேய ஸ்வாமிகள் திரு அவதாரமும் இந்த மாதத்தில்தான்.
ஆகவேதான் சைவ வைஷ்ணவர்கள் இந்த மாதத்தினை சிறப்பாக நோன்பிருந்து கொண்டாடி வழிபட என்று வகுத்துள்ளனர். வைணவ ஆழ்வார்களில் ஒரே பெண்மணியாக உள்ள ஆண்டாள் மார்கழி நோன்பிருக்க என திருப்பாவை பாடி அளித்துள்ளார். சைவக்குறவர்கள் நால்வரில் கடைசீயான மாணிக்கவாசகப் பெருந்தொகை திருவெம்பாவை எனவும் திருப்பள்ளி எழுச்சி எனவும் இந்த மார்கழி மாதத்திற்கு எனவே பாடி வழிபட அளித்துள்ளார்.
இந்த இருவரும் அளித்துள்ள பாடல்கள் யாவும் மிகச் சிறந்தவை. பாடி வழிபட, பலன் அளிக்ககூடியவை. எவரையேனும் எதற்கும் ப்ரயோஜனம் இல்லாதவர்கள் என்று கருதினால் அவர்களை பூமிக்கு பாரம் என்று திட்டுவார்கள்.
ஆனால் உண்மையில் பூமிக்கு பாரம் ஆனவர்கள் யார் என்பதை குறிப்பிடும்போது கோதைத் தமிழ் "ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு" என்று கூறப்பட்டுள்ளது. கோதை எனறு பெயர் கொண்ட ஆண்டாள் நாச்சியார் பாடிக்கொடுத்த திருப்பாவை ஐஐந்தும் + ஐந்தும் (5x5+5=30) அதாவது 30 பாடல்களையும் அறியாத மானிடர்களைத்தான் பூமிக்கு பாரம் என்று கணக்கிட்டுள்ளார்கள். நாம் எவரும் பூமிக்கு பாரமாக இருக்க விரும்ப மாட்டோம்.
பக்தியோடு இறைவனைத் தொழுவதற்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ள இறைவனின் வடிவமாகிய இந்த மாதத்திலே யாவரும் நோன்பு இருந்து, பக்தி மார்க்கத்தை கடைப்பிடித்து, கோதை நாச்சியாரும், மாணிக்கவாசகரும் அருளிய பாடல்கள் அறிந்து பாடி, பூமிக்கு பாரமில்லாமல் இருப்போமாக!
"இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே யாம் ஆட்செய்வோம் மற்றய காமங்கள் மாற்று" என வேண்டி, அவன் தாழ் வணங்கி, அருள் பெற்று இன்புறுவோமாக!
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி.
#MargazhiSpecial
#TiruppavaiTiruvembavai
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
Comments
Post a Comment