காஞ்சி மஹா பெரியவா - தெய்வத்தின் குரலில் இருந்து ...
இமயமலை மகா பெரியதாக இருக்கலாம். கடுகு சின்னஞ் சிறியதாக இருக்கலாம். ஆனால், இமயமலைக்குள் இருக்கிற அத்தனை அவயவங்கள் கடுகுக்குள்ளும் இருக்கும். கடுகைக்கூட அப்படியே பிரித்துக் கொண்டே போகலாம். கடைசியில் ஒர் அணு வந்து நிற்கும். அப்புறம் பிரிக்க முடியாது.
சர்வ வியாபகமாக, இத்தனை அண்ட சராசரங்களாகப் பிரிந்திருக்கிற சிவ – சக்திகளை பிரிக்க முடியாமல் ஓரிடத்தில் பார்க்க வேண்டும் என்றால், அது அவர்களது அன்பு ஊற்றெடுக்கிற இருதய மத்தியில்தான். பலவாக அவர்களிடமிருந்து விரிந்திருப்பதெல்லாம் ஒன்றாகக் குவிகிறது. இந்த அன்பு என்கிற அணுவில்தான்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ (து) ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவ (து) ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
என்கிறார் திருமூலர்.
அன்பு ஒன்றே உள்ள அந்த மனஸைத் தெரிந்து கொண்டு விட்டால், அப்புறம் நம் மனஸும் நூறாயிரம் திசைகளில் ஒடாது; அன்பிலேயே முழுகிக் கரைந்து அன்பாகவே ஆகிவிடும். அருணகிரிநாதன் பெற்ற அநுபூதி இதுதான்.
பரமேசுவரன் வஸ்து (Matter); அம்பாள் அதன் சக்தி (Energy) என்ற ஸயன்ஸ் சூத்திரமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வஸ்துவின் ஸத்தை (சிவமயமான வெறும் இருப்பு) , அதன் மகாசக்தி (அம்பாளின் ஆற்றல்) இதுகளை மட்டும் சொல்லிக்கொண்டு நமக்கு என்ன பிரயோஜனம்?
நம்மைக் கடைத்தேற்றப் போவது அவர்களுடைய அன்புதான், அருள்தான். இருவருடைய அன்பும் பொங்கிப் பெருகிக் கலந்த இந்த இடம்தான் அவர்களுடைய செல்லப் பிள்ளையான ஸுப்ரம்மண்யர். கடைக்குட்டி யாருக்குமே செல்வம்தானே? ‘செல்வ முத்துக் குமரன்’ என்றே வைத்தீசுவரன் கோவிலில் அவருக்குப் பெயர். உள்ளே ஒன்றாக இருந்த அன்பு, இரண்டாகப் பிரிந்து மறுபடி ஒன்றாகக் கலந்து இப்படி நாம் உபாஸிப்பதற்கு சுலபமாக சுப்ரம்மண்யமாக மூர்த்திகரித்திருக்கிறது.
சிவ – சக்தி ஜோதியில் ஜனித்த அவர் மகா தேஜஸ்வி; பரம பராக்கிரமசாலி; எவராலும் சம்ஹரிக்க முடியாத சூரன். தாரகன் முதலான அசுரர்களை வெல்லவே தோன்றிய மகா சக்திமான். சக்தி வேல் என்றே சொல்கிறோம். ஆனால், இந்தப் பராக்கிரம சக்தியோடு, அருட்சக்தியாக இருப்பதே அவருடைய விசேஷம்.
அறிவுச் சக்தியாக இருக்கிறவரும் அவர்தான். ‘ஞான பண்டிதன்’, ‘ஞானஸ்கந்தன்’ என்பார்கள். ஆதிகுருவான தகப்பனாருக்கே உபதேசம் பண்ணினவன். “ஸ்வாமி” என்று அமரத்தில் சொல்லப்படுகிற ஸுப்ரம்மண்யர் இந்த அவசரத்தில் (கோலத்தில்) ‘தகப்பன்சாமி’ எனப்படுகிறார். ‘ஸ்வாமி மலை’ என்றே அவர் சிவனுக்குப் பிரணவோபதேசம் செய்கிற ‘ஸுப்ரம்மண்ய’ ஸ்தலத்துக்குப் பெயர் இருக்கிறது. அங்கே அவரை ‘ஸ்வாமிநாதன்’ என்பார்கள்.
செல்லப்பிள்ளை! அதனால் தன்னைக் காட்டிலும் இந்தப் பிள்ளையை எல்லா அம்சங்களிலும் பெரியவனாகக் காட்டி பூரித்துப் போகிறார் பரமேசுவரன். ‘என்னை விட இவன் ஞானி’ என்று பிள்ளையிடமே தாழ்ந்து உபதேசம் வாங்கிக் கொள்கிறார்.
‘வரம் பல பெற்றுள்ள தாரகன், சூரன் இவர்களை நான் வதைக்க முடியாது; என்னாலும் முடியாததைச் செய்ய – அதாவது என்னைவிடப் பெரியவனாக ஒருத்தன் வரவேண்டும்’ என்றே இந்தப் பிள்ளையைப் படைத்தார்.
அப்புறம் ஞானபலமும் அவனுக்கே அதிகம் என்று காட்ட அவனிடமே உபதேசம் பெற்றுக் கொண்டார். ‘எங்கேயும் தனக்கு வெற்றியைத்தான் விரும்ப வேண்டும். ஆனால் பிள்ளையிடத்தில் மட்டும் தோல்வியை விரும்ப வேண்டும்’ (புத்ராத் இத்தேச் பராஜயம்) என்பார்கள்.
அதாவது, ஒவ்வொரு பிதாவுக்கும் தன்னைவிடத் தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும், புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றுதான் இருக்கும். பரமேசுவரனுக்கே இப்படித்தான் இருந்திருக்கிறது! தானே அம்பாளோடு சேர்ந்து பிள்ளையாக வந்தான் என்றாலும் இப்போது வீரம், ஞானம், லாவண்யம் எல்லாவற்றிலும் முன்னைவிட அதிகமான பிரகாசத்தை எடுத்துக்கொண்டான்.
இங்கே லாவண்யத்தைச் சொன்னேன். ஈசுவரன் மன்மதனைத் தகனம் பண்ணியபின், மன்மதன் திமிரோடு பிரயோகம் செய்த அதே கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாள் எடுத்துக் கொண்டு காமாக்ஷியானாள். ஈசுவரனைத் திமிரோடு நெருங்காமல் அன்போடு பார்த்து, அவரிடம் அடங்கி, இவற்றைப் பாதத்தில் அர்ப்பணம் செய்தாள். சண்டை போட்ட மன்மதனால் உண்டாக்க முடியாத அன்பு, இப்போது இவளது பணிவினாலேயே ஈசுவரனுக்கு உண்டாகி விட்டது. அதன் விளைவாகவே ஜனித்த குமாரன் இவன். இப்போது பார்த்தால், இவனே ஈசுவரன் பொசுக்கின மன்மதனுக்கு மன்மதனாக இருக்கிறான். தமிழில் ‘காமவேள்’ ‘செவ்வேள்’ என்று மன்மதன், முருகன் இவருக்கு மட்டுமே ‘வேள்’ என்கிற பதத்தைப் பொருத்துகிறார்கள்! அது அவனுடைய லாவண்யப் பெருமை.
‘முருகன்’ என்பது தமிழ்நாட்டில் வழங்குகிற வெகு சிறப்பானப் பெயர். ‘முருகன்’ என்றாலும் ‘அழகானவன்’, ‘என்றும் இளமை நலம் மாறாத சௌந்தர்யம் வாய்ந்தவன்’ என்பதே அர்த்தம்.
அழகு என்றால் அது வெறும் சரீர அழகு. அருளின் அழகு தான் இப்படி தேக காந்தியாக வந்திருக்கிறது. பரமேசுவரன் அம்பாள் சம்பந்தத்தோடு இப்படி குமாரனாக ஆவிர்பவித்தபோது வீரம், ஞானம், சௌந்தர்யம் இவற்றோடு அருளிலும் அதிகப் பிரகாசத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஸத் – சித் ஆனந்தம் என்று சொல்வார்கள். அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேசுவரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிற ‘சித்’ அம்பாள்; இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரம்மண்யர்.
சிவம் என்கிற மங்களமும் அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த பரம உத்கிருஷ்டமான ஸ்தானம் அவர். ஸச்சிதானந்தத்தையே ‘சோமாஸ் கந்தர்’ என்று தமிழ் நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.
ஈசுவரனுக்கும் அம்பாளுக்கும் நடுவே, இருவருக்கும் பொதுவான மத்ய ஸ்தானமாக, சுப்பிரமணியர் 'குழந்தை' ரூபத்தில் இருப்பார். உமையோடும், ஸ்கந்தனோடும் கூடியவர் (ஸஹ உமா ஸ்கந்தர்) தான் ஸோமாஸ்கந்தரான பரமேசுவரன்.
‘பிள்ளையார்’ என்று விக்நேசுவரரையே சொல்கிற தமிழ்நாட்டிலும் இங்கே மட்டும் ‘குமரன்’ என்று சிறப்பிக்கப்படுகிற இளைய பிள்ளையை மட்டும், தாய் தந்தையாரோடு வைத்து மூன்று மூர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். ‘பிள்ளை என்றால் இவன்தான்’ என்று எல்லோரும் பெருமைப்படுகிற மாதிரி, பிதாவே பெருமைப்பட்டு தோல்வியை ஒப்புக்கொள்கிற மாதிரி இப்படி உத்தம அம்சங்கள் எல்லாவற்றிலும் உச்சமாக இருக்கிறார் ஸுப்ரமண்யஸ்வாமி.
இதனையும் அறிவோமே...
குமரன் / ஸ்கந்தன் / கார்த்திகேயா - பொருள் விளக்கம்...
...ஓம் முருகா...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#KandhaSashtiSpecial
#MurugarSpecial
#DheivathinKural
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
Comments
Post a Comment