32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் 'பத்மினி ஏகாதசி' விரதம் ...
நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்) 'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....
தற்போது வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த வருடம் 'அதிக' மாதம் வந்துள்ளது.
'அதிக' (Adhika) மாதம், (July / August) வளர் பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "பத்மினி ஏகாதசி" (Padmini Ekadasi) என்று அழைக்கப் படுகின்றது.
பத்மினி ஏகாதசி பற்றி 'ஸ்காந்த புராண' விளக்கம்:
யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக் கேட்கிறார்; பரம்பொருளே, மதுஸூதனா, 'அதிக' மாதத்தில், சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கூறுகையில், ஓ யுதிஷ்டிரா, என் மனதிற்கு ப்ரியமான இந்த ஏகாதசி மகிமை பற்றி உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன் கேளுங்கள் என்று கூறி தொடர்கிறார்...
ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக தொகுத்துள்ளோம் ...
ஸ்ரீ கிருஷ்ணர், மிகவும் மகிழ்ச்சியாக பாண்டவர்களுக்கு பத்மினி ஏகாதசி விரதம் இருக்கும் முறையினைப் பற்றி எடுத்துரைக்கின்றார். விரதம் இருக்கும் நபர், ஏகாதசி முதல் நாளான 'தசமி' அன்றே விரதத்தினை தொடங்கி விட வேண்டும். அவர்கள் தசமி அன்று உளுந்து, கொண்டைக்கடலை, கீரை, தேன், உப்பு ஆகியவற்றை உணவில் தவிர்க்க வேண்டும். மேலும், பித்தளை பாத்திரங்களில் சமைத்த உணவினையோ, கடவுள் பக்தி இல்லாதவர்கள் சமைத்த உணவினையோ எடுத்துக் கொள்ளக்கூடாது. அன்று ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு தரையில் விரிப்பு விரித்து இரவு உறங்க வேண்டும்.
பின்னர் பத்மினி ஏகாதசி அன்று, காலையில் நீராடும் பொழுது, சிறிது மணலுடன் கலந்த பசுஞ்சாணம், சிறிது நெல்லிப்பொடி மற்றும் சிறிது எள் பசை ஆகியவற்றை உடலில் பூசிக்கொண்டு நீராட வேண்டும்.
அவ்வாறு நீராடும் பொழுது, கங்கையை மனதில் நினைத்துக்கொண்டு நீராட வேண்டும், இதன் மூலம் அவர்கள் கங்கையில் குளித்த புண்யத்தினை பெறுகிறார்கள்.
அதன் பின்னர், பகவான் விஷ்ணுவை முழு நாளும் தியானித்து எப்பொழுதும் ஸ்ரீ ஹரி நாமாவை உச்சரித்த வண்ணம் இருக்க வேண்டும். பிறர் பற்றி எந்த குறைகளையும் கூறாமல் இருக்க வேண்டும்.
பின்னர், அன்று முழு இரவும் உறங்காமல் இருந்தால் மிகுந்த பலன் உண்டு. குறைந்த பட்சம் முதல் ஜாமம் உறங்காமல் இருந்தால் அவர்கள், 'அக்னி ஸ்தோமா யாகம்' செய்த புண்யம் பெறுவார்கள்.
இரண்டாவது ஜாமம் வரை உறங்காமல் இருந்தால், 'வாஜ்பேய யாகம்' செய்த புண்யம் பெறுவார்கள்.
மூன்றாவது ஜாமம் வரை உறங்காமல் இருந்தால், 'அஸ்வமேத யாகம்' செய்த புண்யம் பெறுவார்கள்.
முழு இரவும் உறங்காமல் இருந்தால், 'ராஜ சூய யாகம்' செய்த புண்யம் பெறுவார்கள்.
அதன் பின்னர், ஏகாதசி மறுநாள், துவாதசி அன்று காலை நீராடி விட்டு, தகுதி வாய்ந்த ஒரு சில பிராமணர்களுக்கு தானம் அளித்துவிட்டு அதன் பின்னர் விரதத்தை நிறைவு செய்து தானும் உண்ண வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர்,, யுதிஷ்டிரர் மற்றும் பாண்டு புத்திரர்கள் அனைவருக்கும் 'பத்மினி ஏகாதசி' விரதம் இருக்கும் முறையினை பற்றி எடுத்துரைக்கின்றார்.
மேலும், ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்கையில்...
யுதிஷ்டிரா, பத்மினி ஏகாதசி பற்றி, 'புலஸ்த்ய' முனிவருக்கும், நாரத மகரிஷிக்கும் இடையில் நடந்த புராண கால சம்பாஷணை பற்றியும் கூறுகிறேன் கேள் என்று சொல்லி தொடர்கிறார்.
ஒருமுறை, நாரத முனி,புலஸ்த்ய முனிவரிடம், தனது சந்தேகத்தை கேட்கிறார். முனிவரே, உலகில் அனைவரையும் வெல்லும் ஆற்றல் கொண்ட இராவணன், எப்படி 'கார்த்த வீர்ய அர்ஜுனனிடம்' தோல்வியை தழுவினான் ? அதனைப் பற்றி விளக்குங்கள் என்று கேட்கிறார் நாரத மகரிஷி.
புலஸ்திய முனிவர் அதற்கு, பதில் கூறுகையில், ஓ நாரத மகரிஷியே,
த்ரேதா யுகத்தில், ஹயவாகு வம்சத்தின் வழி வந்த 'கார்த்தவீர்யன்' என்ற மன்னர் மஹிஷ்மதி நகரை ஆண்டு வந்தார். அவருக்கு 1000 ராணிகள் இருந்தனர். 1000 ராணிகள் இருப்பினும் ஒரு முனிவரின் சாபம் காரணமாக அவருக்கு புத்ர பாக்யம் இல்லாமல் இருந்தது. மன்னர் கார்த்தவீர்யன் பல தானங்கள் செய்த போதும் அவரது புத்ரபாக்ய வேண்டுதல் மட்டும் பலிக்காமல் இருந்தது.
எனவே அவர், தனது அரண்மனையில் இருந்து புறப்பட்டு முனிவர்கள் இருக்கும் காட்டினை நோக்கி சென்றார். அங்கு முனிவர்களின் வழி காட்டுதலின் படி யாகங்கள் செய்ய எண்ணினார். அவரது மனைவியர்களில் மிகச் சிறந்த அழகியும், புத்திசாலியுமான 'பத்மினி' என்பவர் மட்டும் மன்னருடன் வனத்திற்கு செல்ல ஆயத்தமானார். மன்னருக்கு புத்ரபாக்யம் பெற்றுத்தருவது தமது கடமை என்று எண்ணினார்.
இவர் வேறு யாரும் அல்ல, 'இஷ்வாகு' வழித்தோன்றலில் தோன்றிய 'ஹரிச்சந்திரனின்' புதல்வி ஆவார்.
மன்னர் 'கந்தமதனா' எனும் மலை இருக்கக்கூடிய புண்ய தலத்தினை அடைந்து பல ஆண்டுகளாக யாகங்கள் செய்து வருகிறார். இந்த வேளையில், ராணி பத்மினி, ரிஷியின் புதல்வியாகிய 'அனுசுயா தேவியின்' இருப்பிடம் சென்று அவரிடம், தமது வேண்டுதலை தெரிவிக்கிறார். மேலும், மன்னர் செய்துவரும் யாகங்கள் பற்றியும் தெரிவிக்கிறார்.
அனுசுயா தேவியும், ராணி பத்மினியின் மன ஓட்டத்தினை புரிந்து கொண்டு, புத்ரபாக்யம் பெற ஒரு உபாயம் கூறுகிறார்...
அனுசுயா தேவி அருளிய உபாயம் என்ன ?
ஓ பத்மினி, 32 மாதங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய 'அதிக' மாசத்தில், புருஷோத்தம மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரக்கூடிய, துவாதசி இருக்கும் வேளையில் வரக்கூடிய ஏகாதசி விரதத்தினை நீயும், உனது கணவரும் இணைந்து முறையாக அனுஷ்டித்தால், பகவான் ஸ்ரீ ஹரி உங்களுக்கு வேண்டும் வரம் வழங்குவார் என்று கூறி அருளினார்.
இதனைக்கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்ற ராணி பத்மினி, தனது மன்னரிடமும் இதனைத் தெரிவித்து இருவரும் முறையாக, அதிக மாச வளர்பிறை ஏகாதசி விரதத்தினை கடைபிடித்தனர். ராணி பத்மினி நீர் கூட அருந்தாமல் விரதத்தை கடைபிடிக்கிறார்.
தங்களது விரதத்தை பிராமணர்களுக்கு உணவளித்து நிறைவு செய்தவுடன், இருவரும் மனமுருகி வேண்டிட, பகவான் ஸ்ரீ ஹரி, கருட வாகனத்தில் அவர்கள் முன் பிரத்யட்சமாக தோன்றினார். என் மனதிற்கு ப்ரியமான இந்த ஏகாதசி விரதம் இருந்ததின் மூலம், எனது மனம் குளிர்ந்தது, எனவே விரும்பும் வரம் கேளுங்கள் என்று கூறினார்.
இதனைக்கேட்ட மன்னர் 'கார்த்தவீர்யன்' மனம் மகிழ்ந்து, ஓ மதுஸூதனா, உம்மைத்தவிர வேறு யாராலும் தோற்கடிக்க முடியாத ஒரு புத்திரனை எனக்கு வரமாக அளியுங்கள் என்று வேண்டினார். பகவான் ஸ்ரீ ஹரியும் அவ்வாறே தந்தோம் என்று அருளி மறைந்தார்.
மன்னர் கார்த்தவீர்யனுக்கும் ராணி பத்மினி-க்கும் பிறந்த அந்த குழந்தை 'கார்த்தவீர்ய அர்ஜுனன்' என்று நாமம் சூட்டி பின்னாளில் எவராலும் வெல்ல முடியாத அளவு பலம் பெற்று திகழ்ந்தார்.
இந்த புராண விளக்கத்தினை நாரத மகரிஷிக்கு எடுத்துக் கூறிய புலஸ்திய முனிவர், ஓ நாரத மகரிஷியே, சிறப்பான பத்மினி ஏகாதசி மூலம் பிறந்து வளர்ந்த காரணத்தினாலேயே 'கார்த்தவீர்ய அர்ஜுனன்' , இராவணனை எளிதாக வென்றான் என்று கூறி முடித்தார்.
இவ்வாறு, பத்மினி ஏகாதசி விரதத்தின் மகிமை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர், யுதிஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துக்கூறினார். இந்த விரதக்கதையினை கேட்டவர்களும், படித்தவர்களும் மேலும் மற்றவர்களுக்கு எடுத்துக்கூறியவர்களும் மிகுந்த புண்ய பலனைப்பெறுகிறார்கள் என்றும் கோ தானம் செய்த பலன் பெறுகிறார்கள் என்றும் ஸ்காந்த புராணம் எடுத்துரைக்கின்றது.
ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும் 'பத்மினி ஏகாதசி' தினத்தில் நாம் செய்ய வேண்டியவை:
- வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது இரு வேளைகளோ இருக்கலாம்.)
- வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம்.
- வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம்.
- வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசி சாற்றி வழிபடலாம்.
- (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...
Editors Note:
(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook etc, etc...}ஒவ்வொரு ஏகாதசிக்கும் முதல் நாள் தசமி திதி அன்று 'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)
'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்..... (W05)
ஓம் நமோ நாராயணாய...
ஹரி ஓம்...ஓம் நமோ பகவதே வாசுதேவாய...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
ஓம் நமோ வெங்கடேசாய...
பின் குறிப்பு:
நாம் முன்பே பலமுறை கூறியுள்ளது போல், உபவாஸம் இருப்பது என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என்ற போதிலும், தற்போதைய "கலி யுகத்தில்" இது அவரவர் தனிப்பட்ட உடல் நலனை பொறுத்தது ஆகும்.
வயோதிகர்கள், நோய் வாய் பட்டவர்கள், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் ஏகாதசி விரத பலனை அடைய, ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டும் அரிசி உணவை தவிர்த்து வேறு உணவுகளை (அவல், அல்லது பழங்கள் போன்ற) அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு, பகவான் நாமாவை ஜெபித்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஏகாதசி விரத மகிமையை மற்ற அன்பர்களுக்கும் தெரியப்படுத்தலாம். (இன்றைய COVID-19 சூழ்நிலையில் கோவிலுக்கு செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்து ப்ரார்த்தனை செய்தலே உத்தமம் / கட்டாயமும் கூட...)
ஹரி ஓம்...ஓம் நமோ பகவதே வாசுதேவாய...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Comments
Post a Comment