ஆலயமும், ஆஸ்பத்திரியும்... மஹா பெரியவா பார்வையில்...
எப்பொழுதும் ஏதாவது ஒரு வினாவிற்கு விடை தேடும் பொழுது, முதலில் காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து தேடுவது தான் இந்த சிறியவனின் வழக்கம். தற்பொழுது கூட பல்வேறு புத்திசாலித்தனமான விளக்கங்கள் ஆலயத்தைப் பற்றியும், ஆஸ்பத்திரி பற்றியும் வருவதைப் பார்க்க முடிந்தது.ஆலயத்தேவை மற்றும் ஆஸ்பத்திரி தேவை பற்றி அற்புதமான விளக்கத்தை 'தெய்வத்தின் குரலில்' இருந்து இங்கு பதிவிடுகிறோம்.
ஆலயமும், ஆஸ்பத்திரியும்:
"மனிதர்களுக்குச் சேவை செய்வதே பகவானுக்குச் செய்கிற பூஜை. தனியாக பகவத் தியானம், பூஜை எதுவும் வேண்டாம்" என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கோயில்கள் முதலிய வழிபாட்டிடங்கள் வேண்டியதில்லை என்றும், அவற்றை வைத்தியசாலைகளாகவும் பள்ளிக்கூடங்களாகவும் மாற்றிவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். மனிதர்களுக்கு ஆறுதல் தருவது, நோய்ப்பிணி போக்குவது, கல்வியறிவு தருவது எல்லாம் பரம உத்தமமான பணிதான். அதில் பகவான் நிச்சயமாக ப்ரீதி அடைகிறான் என்பதும் ரொம்ப உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது மனித சேவையே பகவத் சேவை" என்பதையே திருப்பி வைத்துச் சொல்வதும் ரொம்ப உண்மை தெரிகிறது. அதாவது பகவத் சேவை செய்வதும் மனிதர்களின் நன்மைக்காகத்தான் என்று தெரிகிறது. அதுவே மற்ற சமூக சேவைகளைவிட மனிதனுக்கு நிரந்தர நலனைத் தருவதுமாகும்.
ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை குணப்படுத்தி அனுப்புகிறோம். அதன் பின்பு அவர்கள் நல்லவர்களாக வாழ வேண்டாமா? லோகத்துக்குக் கெடுதல் செய்கிறவர்களாகவும், தங்களுக்கே அநர்த்தம் செய்து கொள்பவர்களாகவும், அவர்கள் இருந்தால் அவர்களை குணப்படுத்தியதன் பயனை நாம் அடைய முடியுமா?
புத்திக் கோளாறு உள்ளதாகச் சொல்லப்படும் பலரை என்னிடம் அழைத்து வந்து குணப்படுத்த வேண்டும் என்று கேட்கிறபோது நான் இந்த ரீதியில்தான் உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிறேன். அதை அப்போது அவர்களிடம் சொன்னால், என்னிடம் ஆறுதல் தேடி வருகிறவர்களுக்கு மனசு கஷ்டப்படும், அதனால் சொல்வதில்லை. இப்போது பொதுவாகச் சொல்கிறேன்: புத்தி பூர்வமாக ஒரு தவற்றை செய்தால்தான் அது பாபமாகிறது. ஆனபடியால் புத்தி தங்கள் வசத்திலேயே இல்லாமல் சித்தப் பிரம்மம் பிடித்தவர்கள் செய்கிற எந்தச் செயலிலும் பாபம் இல்லை. ஏதோ பூர்வ ஜென்மபாபத்துக்காக அவர்கள் இப்படி ஆகி இருக்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களுக்குப் பாபமில்லை. நாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுபோல் சித்தப் பிரம்மை பிடித்தவர்கள் பேசுவதில்லை. மனசில் எது வருகிறதோ அதையே சொல்கிறார்கள். ஏன் இவர்களையும் "குணப்படுத்துவது" என்கிற பெயரில் மற்றவர்களைப் போல் ஆக்கி, இவர்களுக்கு பாபம் சேரும்படியாகப் பண்ண வேண்டும் என்று எனக்குத் தோன்றுவதுண்டு.
ஆஸ்பத்திரி வைத்து உடல் வியாதியைத் தீர்ப்பது போதாது. நோயாளிகளது மனஸில் கெட்ட எண்ணங்கள் என்ற வியாதி இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம். இவ்வாறே தான் பள்ளிக்கூடம் வைத்துப் படிப்பை விருத்தி செய்கிறோம். படித்து வெளிவந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால் பள்ளிக்கூடம் வைத்த பயன் நமக்கு ஏது!
பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலானவைகள் இல்லாமல் படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால், சாதூரியமாக அயோக்கியத்தனங்கள் செய்தும் தப்பித்துக் கொள்வதற்குத்தான் வழியாகிறது.
வித்யா சாலையோடும், வைத்ய சாலையோடும் மநுஷ்யனின் வாழ்வு முடிந்து விடுகிறதில்லை. அவன் நல்லவனாக இருக்கவேண்டும் என்பதுதான் லட்சியம். இப்படி நல்லவனாக்குகிற நிலையங்களாக ஆலயங்களும், ஆஸ்பத்திரி, ஸ்கூல் போலவே – ஆஸ்பத்திரியை, ஸ்கூலை விடவும் – அவசியம் இருக்கத்தான் வேண்டும். நாம் நல்லவர் ஆவதற்காக பகவத் தியானம், பூஜை இவைதான் அவசியம் இருக்க வேண்டியவை.
மனிதனின் உடம்புக்கு ஆரோக்கியம் தருவது, புத்திக்குப் படிப்புத் தருவது அவனுடைய தரித்திரத்தை நீக்கிச் செல்வச் சுபிட்சம் தருவது எல்லாவற்றையும்விட அவனை பகவானிடம் சேர்ப்பதே பெரிய உபகாரம். நாமும் பகவானிடம் மனஸைச் செலுத்தி, தியானம், பூஜை இவைகளை அநுஷ்டித்தால்தான் மற்றவர்களை இவற்றில் ஈடுபடுத்த நமக்கு யோக்கியதை உண்டாகும். அப்போதுதான் நாம் செய்கிற பரோபகாரம் சக்தியோடு பலன் தரும்.
மனிதனையே தெய்வமாக நினைத்து அவனுக்குச் சேவை செய்வது சிலாக்கியம்தான். ஆனால் நாம் அப்படி நினைப்பதோடு நிற்காமல் அவனே உண்மையாகத் தன் தெய்வீகத்தைக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள நாம் ஆலயங்களை அவசியம் நல்ல விதத்தில் பேண வேண்டும்.
நல்லவனாவதற்குப் பக்தி தேவையில்லை என்று ஒரு வாதம். ஆனாலும் நடைமுறையில் பலவிதமான சுயநல ஆசைகளால் ஆட்டி வைக்கப்படுகிற ஜீவனைப் பரிசுத்தப்படுத்துவதற்கு பக்தியைப்போன்ற சாதனம் வேறு இல்லவே இல்லை. ‘பகவான் என்று ஒருவன் சர்வ சாட்சியாகவும் சர்வசக்தனாகவும் இருந்துகொண்டு நம் கர்மங்களுக்குப் பலன் தருகிறான்’ என்கிற பயபக்தி உணர்ச்சிதான் யுக, யுகாந்திரமாக மனிதனைத் தர்ம மார்க்கத்தில் நிறுத்துவதற்குப் பெரிய ஊன்று கோலாக இருந்து வந்திருக்கிறது.
பக்தியின் லட்சியம் நல்லவனாக ஆக்குவது மட்டுமல்ல. நமக்குக் காரணமான சக்தியைத் தெரிந்துகொண்டு, அதற்கும் நமக்கும் பேதமில்லை என்ற பரம ஞானத்தை அடைந்து, சம்ஸாரச் சூழலிலிருந்தே தப்புவதே பக்தியின் லட்சியம். அதோடு, வெளி உலகத்துக்கு நல்லவனாக நடக்கவும்கூட. அதுவே வேறெந்த உபாயத்தையும் விட மிகுந்த சக்தியுடன் உதவி புரிகிறது.
கோபுரம் கட்டி எல்லார் கண்களிலும் பட வைத்து பகவானை ஞாபகமூட்டுவதைவிட, வேறு பெரிய சமூக சேவை இல்லை.
Editors Note:
என்ன அன்பர்களே, மஹா பெரியவா எப்போதோ கூறியிருப்பினும், அது எல்லா கால கட்டத்திற்கும் பொருந்துவதாக உள்ளது அல்லவா ? அது தான் மஹான்களது வார்த்தைகளின் மகத்துவம்.
Editors Note:
என்ன அன்பர்களே, மஹா பெரியவா எப்போதோ கூறியிருப்பினும், அது எல்லா கால கட்டத்திற்கும் பொருந்துவதாக உள்ளது அல்லவா ? அது தான் மஹான்களது வார்த்தைகளின் மகத்துவம்.
ஓம் நம ஷிவாய... ஹரி ஓம்...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Comments
Post a Comment