தைப்பூசம் வழிபாடு / சிறப்புகள்:
முருகப்பெருமானின் முக்கியமான விழாக்களில் ஒன்றானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திரங்களில் 8-வது நட்சத்திரமான 'பூசம்' , தை மாதத்தில் வரும்பொழுது (அன்று பௌர்ணமியும் சேர்ந்து வரும்) தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.
தைப்பூச தினத்தன்று நிகழ்ந்துள்ள பல்வேறு அற்புத நிகழ்வுகளை நாம் கண்டோமேயானால், இந்த தினத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான், தனது தாய் பார்வதி தேவியிடம் வேல் வாங்கிய தினம் 'தைப்பூசம்' ஆகும். ஆகவே, வெற்றி பெறுவதற்கு உகந்த விஷயங்களை செய்வதற்கு ஏற்ற நாள் ஆகும்.
முற்காலங்களில், தைப்பூச தினத்தன்று 'புனித நீராடல்' நடைபெற்று வந்திருக்கின்றது. 'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே' என்று இதன் பெருமையினை அப்பர் பாடுகிறார்.
மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின், ப்ரம்மஹத்தி தோஷம் (அந்தணரை கொன்ற தோஷம்) நீங்கப்பெற்றது இது போன்ற ஒரு 'தைப்பூச' திருநாளில் தான்.
சோழ நாட்டை ஆண்டு வந்த 'அம்சத்வன்' என்ற அரசனது ப்ரம்மஹத்தி தோஷம் , திருவிடைமருதூரில் புனித நீராடி அங்கு இறைவனை வேண்டி தோஷம் நீங்கப்பெற்றதும் இது போன்ற ஒரு 'தைப்பூச' திருநாளில் தான்.
திருஞான சம்பந்தர், சென்னை, மயிலாப்பூரில், கபாலீஸ்வரர் கோவிலில், பூம்பாவை எனும் இறந்த பெண்ணின் எலும்பினையும், சாம்பலையும் கொண்டு மீண்டும் உயிர் பெறச்செய்த நிகழ்வு இன்றளவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அற்புதம் நிகழ்ந்ததும் இது போன்ற ஒரு 'தைப்பூச' திருநாளில் தான்.
கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின்
உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே
போதியோ பூம்பாவாய்.
மைப்பூசும் ஒண்கண்
மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான்
கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல்
நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே
போதியோ பூம்பாவாய்.
பூம்பாவை திருப்பதிகம் என்று அழைக்கப்படும் இது போன்ற 11 பதிகங்களை பாடி திருஞான சம்பந்தர் , மயிலாப்பூரில், ஏழாம் நூற்றாண்டில் இந்த அற்புதத்தை நிகழ்த்தினார்.
சமீபத்தில், சொல்வதென்றால், 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்றவரும், 'அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' என்று இறைவனை ஜோதி வடிவாக வணங்கி 'திருவருட்பா' வை நமக்கு வழங்கியவருமான 'திரு அருட் பிரகாச வள்ளலார்' ஜோதி வடிவமானது இது போன்ற ஒரு 'தைப்பூச' திருநாளில் தான்.
வள்ளல் பெருமான், வடலூரில், சித்திவளாகக் கூடத்தில் அமர்ந்திருந்த அன்பர்களை பெருங்கருணையோடு நோக்கி, "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபட்டு உய்யுங்கள்'' என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். பின் இரண்டரை நாழிகை அளவில் அருட் பெருஞ்ஜோதியாகி ஆண்டவனோடு ஐக்கியமாகி விட்டார்.
ஆம், 1874ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி (திருமுக ஆண்டு தை 19) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு 'ஒளிவடிவம் பெற்று இறையோடு' கலந்தார்.
இந்த நாள் குருவிற்கும், முருகனுக்கும் உகந்த நாள் என்பதால், குரு பகவானை தரிசிப்பதும், முருகப்பெருமானை தரிசிப்பதும் சிறப்பு.
அறுபடை வீடுகளிலும் சிறப்பான பூஜைகள் உண்டு என்ற போதிலும், பழனி மலையில் கொண்டாட்டங்கள் மிக, மிக சிறப்பாக இருக்கும். அதற்கடுத்து திருச்செந்தூரில், குருவும் சேர்ந்து வீற்றிருப்பதால் மிக சிறப்பு. அதனைப்போலவே, வெளிநாடுகளிலும் சிங்கப்பூர், மலேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கூட இந்தியாவில் இருந்து சென்றவர்கள் மூலம், தைப்பூச திருவிழா மிக மிக சிறப்பாகவும், ப்ரம்மாண்டமாகவும் கொண்டாடப் பட்டு வருகிறது...
இது போன்று பல அற்புதங்கள் நிகழ்ந்த, தைப்பூச திருநாள் செய்வினை, ஏவல் போன்ற எதிர்மறை எண்ண அலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விடுபடவும், மற்றும், நரம்பு சம்பந்த நோய் உள்ளவர்கள், எலும்பு நோய், இரத்த அணுக்கள் குறைபாடு மற்றும் இரத்த கொதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தைப்பூச திருநாளில் முருகனை வழிபட நல்வழி பிறக்கும் என்பது திண்ணம்...
இந்த நாளில், 'கந்தர் கலி வெண்பா' இசைக்க செய்து கேட்பதோ அல்லது முடிந்தவர்கள் தானும் சேர்ந்து சொல்வதோ மிகுந்த பலனைத்தரும்...
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா...
வீரவேல் முருகனுக்கு அரோஹரா...
வீரவேல் முருகனுக்கு அரோஹரா...
...உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
நன்றி ...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Comments
Post a Comment