திருமண மந்திரங்களின் உண்மையான அர்த்தம் என்ன ? சாஸ்திரங்கள் கூறும் உண்மையான அர்த்தம் பற்றி 'மகாமகோபாத்யாய' "ஸ்ரீ சேஷாத்ரி நாத சாஸ்திரிகள்" விளக்கம் ?
நன்றி: சக்தி விகடன்
திருமண மந்திரங்கள் அபத்தமானவையா ? ?
இல்லவே இல்லை... அவை மிகப் புனிதமானவை;
ஆழமான அர்த்தம் பொதிந்தவை.
இல்லவே இல்லை... அவை மிகப் புனிதமானவை;
ஆழமான அர்த்தம் பொதிந்தவை.
இது குறித்து 'மகாமகோபாத்யாய' ஸ்ரீசேஷாத்ரிநாத சாஸ்திரிகள், 2005-ம் ஆண்டு "சக்தி விகடனில்" எழுதிய விரிவான கட்டுரையை, இதோ உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்...
‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்’ என்று ஒரு பழமொழி. இதற்கு ஏதேதோ அர்த்தங்கள் சொல்கிறார்கள். ஆனால், கல்யாணத்தின்போது இதற்கு வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பொருளே வேறு.
மணப்பெண் - மணமகள் இருவருமாகச் சேர்ந்து அக்னி பகவானிடம் வேண்டுகிறார்கள். அப்படி வேண்டுவது பதினாறு விஷயங்களை. அவற்றை அக்னி பகவான் அருள, இவர்கள் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கிறார்கள்.
சரி, அந்தப் பதினாறு வேண்டுதல்கள் என்னென்ன?
பெண் குழந்தை பிறந்ததிலிருந்து கல்யாணம் வரை யிலும் உள்ள கால இடைவெளியை மூன்று பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு தேவன் அவளுக்குப் பாதுகாவலனாக இருக்கிறான் (எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் இது பொருந்தும்).
முதல் பிரிவின் பாதுகாவலன் - சோமன்; இரண்டாவது - கந்தர்வன்; மூன்றாவது - அக்னி.
அக்னி தேவதைக்குப் பிறகுதான் அடுத்த காப்பாளனான கணவனை அந்தப் பெண் அடைகிறாள். தனக்கு முன்னதாக காப்பாளனாக இருந்ததாலும் திருமாங்கல்யத்தின் தேஜஸுக்குக் காரணமாக இருப்ப தாலும் அக்னியிடம், ‘நீ காப்பாற்றி வந்த பெண்ணை என் வசம் கொடுத்திருக்கிறாயே... என் கடமையை ஒழுங்காக நிறைவேற்ற எனக்கு சில சௌகரியங்களைச் செய்து கொடு’ என்று வேண்டுகிறான். அந்தக் கோரிக்கைகள் பதினாறு.
பதினாறு பேறுகள்...
* 1. இந்தப் பெண்ணின் முதல் காப்பாளனாகிய சோமனுக்கு, ஹே அக்னியே... உன் மூலமாக இந்த ஹவிர்பாகத்தை அளிக்கிறேன். அவனுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
* 2. இரண்டாம் காப்பாளனாகக் கந்தவர்-வனுக்கு என் நன்றியும் ஹவிர்பாகமும், அக்னியே... உன் மூலம் சேரட்டும்.
* 3. அக்னியே... உனக்கும் இந்த ஹவிர்பாகத்தைத் தருகிறேன். இந்தப் பெண்ணோடு உங்கள் மூவருக்கும் ஏற்கெனவே பரிச்சயம் இருக்கிறது. இனிமேலும் எந்த சந்தர்ப்பத்திலெல்லாம் எங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் அனுக்கிரகம் செய்ய வேண்டும்.
புகுந்த வீட்டிலும் சந்தோஷம்...
* 4. இவள் என்னிடம் வந்திருக்கிறாள். எப்படி நடத்தினால் இவளுக்குச் சந்தோஷம் கிடைக்குமோ, எப்படி வைத்துக்கொண்டால் எனக்குப் புகழ் கிடைக்குமோ, எப்படி நடத்தவேண்டுமென்று கலாச்சாரத்தில் இருக்கிறதோ, அப்படி நடத்தும் தகுதியை எனக்குக் கொடு. ஏற்கெனவே இவள், தன் அப்பா வீட்டில் சந்தோஷமாக இருந்தவள். திடீரென்று ஒரு நொடியில் என் வீட்டுக்கு வருகிறாள். பிறந்த வீட்டிலிருந்த சந்தோஷம் குறைந்துவிடாமல் அவளை வைத்திரு.
* 5. இந்தப் பெண்ணை நான் தீர்மானிப்பதற்கு சகல ஐஸ்வர்யனான இந்திரன் எனக்கு உதவினான். அந்த இந்திரன் இவளுக்கு வேண்டிய சௌகரியத்தைக் கொடுத்து அருள்க. எங்கள் இருவருக்கும் தேவேந்திரனின் பரிபூர்ண அனுக்கிரகம் உண்டாகட்டும்.
`நானே குழந்தையாக வேண்டும்...’
* 6. நாங்கள் கல்யாணம் செய்துகொண்டு தம்பதியாக இருப்பதற்குப் பல கோணங்கள் உண்டு. ஒற்றுமையாக இருக்கவும், கடமைகளைச் செய்யவும், தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய - வேதம் சொன்ன விஷயங்களை நடத்திக்காட்டவும் போகிறோம். எந்தக் குறையும் இல்லாத, ஆரோக்கியமான இவளுக்குத் துக்கம் ஏற்படுத்தாத குழந்தைச் செல்வத்தை... இவள் எந்தச் சிரமமுமில்லாமல் பெற்றெடுக்க அக்னி பகவானே, நீ அருள்புரிவாய்!
ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்ளாமல் நிறைந்த குழந்தைச் செல்வத்தை அருள். ‘தன் கடைசிக் குழந்தையாக இவள் என்னை எண்ணும் படி செய்’ என்று கேட்கிறான்.
ஏனென்றால், ஆணும் பெண்ணும் சேரும்போது அவளுடைய முழு அன்பும் அவன் மேல்; அவனது மொத்தப் பிரியமும் அவள் மீது; குழந்தை பிறந்ததும் இருவரது அன்பிலும் ஒரு பங்கு குழந்தையின் மேல் போய்விடுகிறது. அடுத்த குழந்தை பிறக்கும் போது அதன் மேல் இதைக் காட்டிலும் கூடுதல் அன்பு பிறக்கிறது. முதல் குழந்தையின் மீதுள்ள அன்பு குறையாது. இரண்டாவது குழந்தையின் மேல் கொஞ்சம் கூடுதல் அன்பு... அவ்வளவுதான். மீண்டும் ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் மீது அதிகப்படியான அன்பு செலுத்துகிறாள். இப்படி கடைசிக் குழந்தையின் மீதுதான் மிக அதிக அன்பு இருக்கும். அதனால் என்னை கடைசிக் குழந்தையாக இவள் கருதவேண்டும் என்று வேண்டுகிறான்.
இந்தத் தம்பதியின் ஒற்றுமை எதுவரை இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. ‘நானும் இவளும் என் வீட்டில் என் கொள்ளுப் பேரனோடு அவனுக்கு ஈடுகொடுத்து விளையாடி மகிழுமளவு இருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடு’ என்று கேட்கிறான். கொள்ளுப்பேரனை ‘நப்தா’ என்கிறார்கள். வேறு எந்த பாஷையிலும் கொள்ளுப் பேரன் என்பதற்கு இணையான தனி ஒரு வார்த்தை கிடையாது.
சரீர சந்தோஷம் என்பது இளமை இருக்கும்வரை தான். அந்த சந்தோஷம் மட்டுமே நோக்கம் என்றால் இருவருக்கும் இடையில் பிடிப்பு போய்விடும். ஆகவே, நட்பு வேண்டும். சப்தபதியில் விளக்கிய அந்த அடிப்படை நட்பு, கொள்ளுப் பேரனோடு சேர்ந்து விளையாடும் வரை நீடிக்க வேண்டும்’ என்பது இந்த வேண்டுகோளின் நோக்கம்.
ஆரோக்கியம் வேண்டும்...
* 7. அக்னி பகவானே - இந்தப் பெண்ணுக்கு... இன்று மறைந்திருந்து நாளை வெளிப்படும் எந்த ரோகமும் இல்லாமல், நோயின் மூலத்தை வெளியே தள்ளிவிடு. பெற்றுக்கொள்ளும் குழந்தையின் மூலம் (அதற்குக் குறைபாடுகள் இருந்தால்) இவளுக்குத் துக்கம் வராதபடி அனுக்கிரகம் செய்.
* 8. நமக்கு தேஜஸ் வேண்டுமென்றால் அக்னியைத் தவிர யாரிடம் கேட்க முடியும்? அக்னியைக் காட்டிலும் தேஜஸ் வாய்ந்தவர் யார்? உயிர் வாழ தேஜஸ் அல்லவா முக்கியம்? இதை அக்னியிடம் வேண்டிப் பெற்றுக்கொள் என்கிறது வேதம். எப்படி வேண்டுவது என்றும் அது சொல்கிறது. ‘தேவர்களில் தேஜஸ்வி யார் என்று கேட்டால் அக்னி என்கிறார்கள். அதுபோல மனிதர்களில் நான் தேஜஸ்வி என்று பெயர் பெறும்படி என்னையும் உன் போல் ஆக்கு என்று கேட்கச் சொல்கிறது.
ஆகவே, ‘நாங்கள் இருவர். பிரார்த்தனை ஒன்று. இன்று நான் கிருஹபதி ஆகியிருக்கிறேன். என்னால் உனக்கு கார்ஹபத்ய அக்னி என்ற பெயர் கிடைத்திருக்கிறது. நீ என் குடும்பத்தைச் சேர்ந்தவன். அந்நியன் அல்ல. என்னிடம் ஏதேனும் குறைந்தாலும் அது மீண்டும் பெரிதாக வளர்கிற மாதிரி அருள் செய். நீதான் இந்தப் பெண்ணை என்னிடம் ஒப்படைத்தாய். இனிமேலும் இவள் தேஜஸோடு இருக்கிறாளா என்பதை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும். நாங்கள் சேர வேண்டுமானால் என்னிடம் சூடு இருக்க வேண் டும். அதைத் தருபவன் அக்னியாகிய நீதான்.
நெய் போன்றவள் இந்தப் பெண். நான் தணல். தணல் இருந்தால்தான் நெய் உருகிப் பக்குவம் ஆகும். உன் அக்னி அம்சத்தை என்னிடம் உண்டாக்கு. அப்போதுதான் நான் அவளைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும். குழந்தைச் செல்வத்தைக் கொடு. மகிழ்ச்சியின் முடிச்சாகிய குழந்தையை நீண்ட ஆயுளோடு கொடு.
* 9. இந்தப் பெண் என்னைக் கல்யாணம் செய்துகொண்டு வந்திருக்கிறாள். இவளுக்கு எத்தனையோ ஆசை இருக்கும். மற்ற ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்கிற தகுதி என்னிடம் இருக்கிறது. படித்திருக்கிறேன். சம்பாதிப்பேன். வீடு வாங்குவேன். வாகனம் வாங்குவேன்.
ஆனால், உன் ஆதரவு இருந்தால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சந்தித்துக் கொள்பவர்களுக்கெல்லாம் குழந்தை பிறப்பது இல்லை. நூற்றுக்கணக்கான சந்திப்புகள் நடந்தாலும் ஏதோ ஒரு சந்திப்பில்தான் குழந்தை உருவாகிறது. உன்னிடம் வேண்டுவது இதுதான்.
அவள் காலி மடியோடு இருக்கக்கூடாது. குழந்தை உள்ள மடியுடனேயே அவளை நான் காணும்படி செய். தன் மடியில் குழந்தை இருக்க, அதை நாங்கள் இருவரும் பார்த்து ரசிக்கும்படியாக அவளுக்கும் தீர்க்க ஆயுளைக் கொடு. அந்தப் பிள்ளைக்கும் குழந்தை பிறந்து இவள் பார்க்க வேண்டும். இதற்கு உன் அனுக்கிரகம் வேண்டும்.
மகிழ்ச்சி வேண்டும்:
* 10. எதிர்மறையாகப் பேசுகிறேன் என்று நினைக்காதே. என் பாதுகாப்பில் வந்திருக்கும் இவள், பாதி ராத்திரியில் தலையை விரித்துப் போட்டு, மார்பில் அறைந்துகொண்டு கண்ணீர் விடும் படியான சந்தர்ப்பம் வராமல் பார்த்துக்கொள். நான் அச்சானியமாகக் கேட்பதாக நினைத்துக் கொள்ளாதே.
இப்படிப்பட்ட ஒரு காட்சி எவ்வளவு துக்க கரமானது என்பதை உணர்த்தவே சொன்னேன். பகவான் அவளுக்குக் கொடுத்திருக்கிற ஆயுசுவரைக்கும் என்னோடு மகிழ்ந்திருக்கச் செய்.
* 11. அனைவரும் பாராட்டும் வகையில் அவள் பிரகாசமாக இருக்கவேண்டும். தொண்டு கிழமானாலும் பிரகாசம் குறையக் கூடாது.
திருமணமான அன்று இருந்த அதே மனநிலை, இத்தனை காலம் கஷ்டமில்லாமல் வாழ்ந்துவிட்டோம் என்கிற மனத்திருப்தி ஆகியவற்றை அவளுக்கு ஏற்படுத்தும் பொறுப்பு உன்னுடையது. அதுமட்டும் போதாது. கிளை கிளையாக வளர்ந்திருக்கிற வாரிசுகளைப் பார்த்து மகிழவேண்டும்.
தேவர்கள் காக்கட்டும்:
* 12. இந்தப் பெண்ணின் பிருஷ்டத்தை `த்யெள' என்கிற தேவதையும், தொடைகளை வாயுவும், கொங்கைகளை அஸ்வினி தேவர்களும், குழந்தைகளைச் சூரியனும் பாதுகாக்கட்டும். என் கூறைப்புடவையை இவள் கட்ட ஆரம்பித்ததிலிருந்து பிரஹஸ்பதி காப்பாற்றட்டும். அவளுடைய நான்கு புறங்களையும் விஸ்வே தேவர்குழு காப்பாற்றட்டும்.
* 13. திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று எண்ணாதே... அவளை மலடியாக்கிவிடாதே. அவளின் பரம்பரையில் பிஞ்சுக் குழந்தைகள் அகால மரணமடையும்படிச் செய்துவிடாதே. குழந்தைகளின் குறையை நினைத்து இவள் கவலைப் படும்படி செய்துவிடாதே. குடியிருக்கும் பூவானது வாடிவிட்டால் எப்படி நாரோடு சேர்த்துத் தூக்கி எறிகிறாளோ, அதேபோல் இவளது துயர்களையும் தூர எறியும்படி செய்.
* 14. வருணனிடம் இந்தப் பிரார்த்தனை. நான் எத்தனையோ தேவதைகளைப் பிரார்த்தித்திருக்கிறேன். அவர்கள் அவற்றை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அந்தப்பொருள்கள் எல்லாம் எனக்குக் கிடைத்தவுடன் அவற்றை நிரந்தரமாக்கி இழப்பில்லாமல் இருக்க நீ அருள்செய்.
* 15.ஹே... அக்னீ! உன்னை மட்டுமின்றி நான் வேறு தேவதை-களையும் கூப்பிட்டுப் பிரார்த்தித்தேன். எதை, யாரால் கொடுக்க முடியுமோ அதை அவர்களிடம் கேட்டேன். ‘என்னிடமே கேட்டிருக்கலாமே’ என்று கோபித்துக்கொள்ளாதே. இடையூறு விலக வேண்டுமென்றால் விக்னேஸ்வரர், சத்ருக்கள் அழிய மகாவிஷ்ணு என்று அவரவர்க்குரிய சிறப்பைக் கேட்டேன்.
வருணன் முதலான மற்ற தேவதைகளை நான் பிரார்த்தித்திருந்தாலும் அவர்கள் அருள்வார்கள் என்று இருந்துவிடாதே. வருணனோடு நீயும் சேர வேண்டும். எப்போதும் நீங்கள் இருவரும் சேர்ந்தே இருப்பீர்கள்.
நெருப்பு, நீர் இரண்டும் இல்லையென்றால் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. வருணன் மட்டும் இருந்தால் உபயோகமில்லை. அக்னியும் சேர்ந்திருக்கவேண்டும். உற்பத்தி மட்டும் போதாது. பரிணாமமும் வேண்டும். அந்த வளர்ச்சி, அக்னியால் அல்லவா கிடைக்கும்? எனவே, மற்ற தேவதைகள் கொடுத்தவற்றைப் பெரிதாக்கி என்னை மகிழச் செய்வது உன் கடமை.
* 16. நம் பண்பாட்டில் ஆரம்பமும் அக்னி, முடிவும் அக்னி, இடைவெளியும் அக்னி. நாம் பிறக்கும்போதும், வாழும்போதும், போகும்போதும் தேஜஸோடு இருக்கிறோம். எனவே, எங்கள் ஜீவிதம் இருக்கும் வரை, நிரந்தரமாக எங்களுடனேயே இருந்து உன் அனுக்கிரகத்தை எங்களுக்குக் கொடு’ என்று வேண்டுகிறான் மணமகன்.
இந்தப் பதினாறும்தான் தம்பதிகளுக்குத் தேவை.
ஆயுர்வேதம் சொல்வது என்ன?
மூவரும் அருளட்டும்:
மூவரும் அருளட்டும்:
சோமன் என்றால் கபம் என்று அர்த்தம். குழந்தை பிறக்கும் போது கபம் அதிகமாக இருக்கும். அதனால் சின்ன வயதில் அதிக நோய்கள் ஏற்படும். இதனால் தொல்லை கொடுக்காமல் காப்பாற்றும் சோமனைக் காப்பாளன் என்றார்கள்.
வளர்கையில் குரல் மாறுவது, அழகு அதிகரிப்பது... இந்தப் பொறுப்பை கந்தர்வன் ஏற்றுக் கொண்டிருக்கிறான். அழகுக்கு மூலப் பொருள் கபம்.
அழகும் பருவமும் கனியும்போது துணை தேடும் உணர்வு தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. இப்படி ஆயுர்வேதம் சொல்கிறது. பாதுகாவலர்கள் என்றால், பெண்ணின் அந்தந்தப் பருவத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது இவர்கள் வேலை. அப்படி பாதுகாத்ததை அக்னி, இவனிடம் ஒப்படைப்பதால் அக்னியிடம் வேண்டுகிறான் மணமகன்.
அக்னி இருக்குமிடம் சர்வ சுத்தம். இரண்டு பருவங்களைக் கடந்த பெண் அக்னியின் காப்புக்குள் வரும்போதே சர்வ சுத்தமாகி விடுகிறாள். நாமெல்லாம் குளித்தால்தான் சுத்தம், கல்யாணம் செய்துகொண்ட பெண், கை கால் அலம்பி, முகம் கழுவி பொட்டிட்டுக்கொண்டு வந்தாலே சுத்தம். ‘சுமங்கலி சர்வ சுத்தி’ என்பார்கள். இந்த சுத்தத்தைத்தான் கற்பு என்கிறோம்.
வராஹமிஹிரர், ‘கபம் அழகைக் கொடுத்தான்; கந்தர்வன் குரலைக் கொடுத்தான். அக்னி எண்ணத்தைக் கொடுத்தான்’ என்று குறிப்பிடுகிறார்.
இந்த அக்னியை நான் வழிபடுவேன். அவள் தினமும் விளக்கேற்றிவைத்து ஆராதனம் செய்வாள். இது என்றென்றும் நீடித்திருக்க வேண்டும் என்று கணவன் வேண்டுவதே சம்ஸ்காரத்தில் இந்தப் பகுதியின் அடிப்படை!
திருமாங்கல்யம் எதற்கு?
தங்கம் ஆதிசிருஷ்டியான ஹிரண்யகர்ப்ப பகவானின் கர்ப்பத்திலிருந்து வந்தது. அக்னியின் அம்சம் தங்கம், அதற்கு தேஜஸ் என்று பெர்யர். இந்திய தர்க்கவியல், தங்கத்தை ‘தேஜஸ்’ என்கிறது. மனைவியின் தேஜஸ் நிரந்தரமாக இருக்க கழுத்தில் எப்போதும் திருமாங்கல்யம் அணிய வேண்டும்.
கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், ‘நமக்கு இருக்கக் கூடிய அழியாத சொத்து தங்கம்’ என்கிறது. வேதத்தில், ‘நீ தினமும் தங்கத்தை அணிந்துகொள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒற்றுமையின் அடையாளம் தங்கம்.
‘தாலபத்ரம்’ என்பதிலிருந்து பிறந்ததுதான் தாலி என்ற சொல். பழங்காலத்தில் பெண்கள் தங்கள் காதுத் துளையில் சுருள் பனை யோலையைப் போட்டுக் கொள்வார்கள். இதற்கு ‘தாலம்’ என்று பெயர். கழுத்திலும் ஏதாவது ஒன்று எப்போதும் இருக்க வேண்டும். தம்பதியின் நெருக்கம் ஒரு நாளும் குறையக் கூடாது என்பதற்காக அதை நினைவுறுத்தும்படியாக கழுத்தில் எப்போதும் தாலி இருக்க வேண்டும்.
Editors Note:
என்ன அன்பர்களே, கலி-யுகத்தில் தமிழில் உள்ள பல பாடல்களுக்கே முழுவதும் சரியான விளக்கம் புரியாமல், அவர்களுக்கு என்ன தேவையோ அல்லது என்ன தோன்றுகிறதோ, வாயில் வருவதை எல்லாம் விளக்கம் என்று சொல்லி, அள்ளி வீசிச்செல்லும் கால கட்டத்தில், சமஸ்கிருத மந்திரங்களை பற்றி ஒரு சில நபர்கள் கூறும் கட்டுக்கதைகளுக்கு உண்மையான விளக்கம் கொடுக்க வேண்டி, சாஸ்திரிகள் கூறிய இந்த பதிவு இப்பொழுது அத்தியாவசியம் ஆகிறது. மேலும், இதனை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும் உள்ளது.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உங்கள் கடமையை செய்வீர்கள் தானே ?
...நன்றி ...
...உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Comments
Post a Comment