நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்) 'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....
கார்த்திகை மாதத்தில், வளர் பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "மோக்ஷ ஏகாதசி" (Moksha Ekadasi) என்று அழைக்கப் படுகின்றது.
இந்த கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது மூன்று முக்கிய விஷயங்கள் ;
- 1. மோக்ஷ ஏகாதசி பற்றி ப்ரம்மாண்ட புராண விளக்கம்.
- 2. கைசிக மஹாத்மியம் - வராஹ புராண விளக்கம்.
- 3. கீதா ஜயந்தி - பகவத் கீதை தோன்றிய நாள்.
இதனைப் பற்றி "ப்ரம்மாண்ட புராணத்தில்" கூறப்பட்டுள்ளவை பற்றி இங்கு காண்போம்... (Brahmanda Purana) ஹிந்து மதத்தின் அண்டம் பற்றிய பல கோட்பாடுகளை இந்த புராணத்தில் தெளிவாகக் கூறுவதால் இதற்கு 'ப்ரம்மா-அண்ட' (Cosmic -Egg ) புராணம் என்று பெயர் ...
கைசிக ஏகாதசி எனும் மோக்ஷ ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி விரிவாக கூறுகிறேன் கேள் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதை நாம் இங்கு விவரிக்கிறோம் ...
முன்பொரு காலத்தில், 'ஷம்பக நகர்' எனும் அழகிய நகரை, 'வைகானஸா' எனும் அரசன் சிறப்பான ஆட்சி புரிந்து வந்தார். அந்த நகரில், அந்தணர்கள் அனைவரும் நான்கு வேதங்களையும் நன்கு அறிந்திருந்து அரசனுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தனர். அதன் காரணமாக, அரசனும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லாட்சி வழங்கி வந்தார். அரசன் மிகுந்த பக்திமானாக விளங்கினார்.
ஒரு நாள் இரவு, அரசன் உறங்குகையில் ஒரு கனவு கண்டார்... அதில் தனது தந்தை யமராஜனின் நரக லோகத்தில் நரக சித்ரவதை அனுபவிப்பதை போலவும், அதில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தன்னிடம் வேண்டுவது போலவும் இருந்தது.
மறுநாள் காலையில் தனது அரண்மனையை கூட்டி, அதில் மந்திரி பெருமக்கள் மற்றும் அந்தணர்களை வரவழைத்து தனது கனவினை பற்றி எடுத்துக்கூறி அதற்கு விளக்கம் கேட்டார்.
மேலும், தனது தந்தை நரக வேதனை அனுபவிக்கிறார் என்றால், அதற்கு நிவாரணம் தேடாமல், தான் மன்னனாக இருந்தும் என்ன பிரயோஜனம் என்ற கேள்வி மன்னனை வேறு எந்த வேலையையும் செய்ய விடாமல் வேதனையில் ஆழ்த்தியது...
அந்த வேளையில், ஒரு அந்தணர் கூறினார் ...
ஓ மன்னா,
நாட்டு மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் விரும்புபவரே, உமது கனவிற்கு உண்டான சரியான தீர்வை முக்காலமும் (கடந்த கால / நிகழ் கால / வருங்கால) அறிந்த ஞானியாகிய 'பர்வத முனி' ஆஷ்ரமத்திற்கு சென்றால் அறியலாம் என்று கூறினார்.
தனது கனவிற்கு தீர்வு காணவேண்டும், தனது தந்தைக்கு நரக லோகத்தில் இருந்து முக்தி வேண்டும் என்ற காரணத்தால், வைகானஸ மன்னரும், உடனடியாக 'பர்வத முனி' யை தரிசிக்க அவரது ஆஸ்ரமத்திற்கு கிளம்பினார்.
'பர்வத முனி' ஆஸ்ரமத்திற்கு சென்ற மன்னர், அங்கு பல்வேறு ரிஷிகளும், முனிவர்களும் நான்கு வேதங்களையும் (ரிக், யஜுர், சாம, அதர்வண) பாராயணம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்து அவர்களிடம் ஆசி பெற்று பின்னர் 'பர்வத முனி' யை சந்திக்கிறார்...
'பர்வத முனி' யும் வைகானஸ மன்னனிடம், மக்களின் நலம், நாட்டு மந்திரிகளின் நலம், நாட்டின் செல்வ வளம், படை பலம் மற்றும் அந்தணர்களின் நலன் பற்றி விசாரித்தார். மன்னரும், அனைத்து விஷயங்களும் தங்களின் ஆசிர்வாதத்தால் நன்றாக உள்ளது, ஆனால் எனக்கு தான் பெரும் குறை ஒன்று உள்ளது முனிவரே, என்று கூறி தனது கனவினை பற்றி விவரிக்கிறார்... அதற்கு தீர்வினை கூறுங்கள் என்று வேண்டுகிறார்...
ரிஷி 'பர்வத முனி'யும் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து, மன்னரது கனவிற்கான காரணத்தையும் அதற்கான தீர்வையும் தனது ஞான த்ருஷ்டியின் மூலம் அறிகிறார்...
பின்னர், மன்னரிடம் உரைக்கிறார் ...
ஹே, மன்னா, உனது தந்தை தான் வாழ்ந்த காலத்தில், மிகவும் காம மோகத்தில் இருந்து அதனால் பல தவறுகளை இழைத்துள்ளார்... அதனாலேயே, பெரும் பாவத்தை பெற்று தற்பொழுது நரக வேதனையை அனுபவித்து வருகிறார், உமது கனவில் கண்டது உண்மையே என்று கூறுகிறார்.
(ப்ரம்மாண்ட புராணத்தில், காரணத்தை மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் கொடுத்துள்ளனர்... கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நாம் தான் அதனை ஒற்றை வரியில் கொடுத்துள்ளோம்...)
உடனே, மன்னர் வைகானஸா மனம் வருந்தி , முனிவரிடம் இதற்குண்டான ப்ராயச்சித்தம் என்ன, எவ்வாறு தனது தந்தையை, நரக லோகத்தில் இருந்து விடுவிப்பது என்றும் ஆலோசனை வழங்குமாறு வேண்டுகிறார்.
பர்வத முனி கூறுகிறார், ஓ மன்னா, ம்ருகசீர்ஷ மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசி அன்று நீயும், உனது குடும்பத்தாரும் விரதம் இருந்து, உனது புண்ணிய பலனை உனது தந்தைக்கு மானஸீகமாக தானம் செய்வதன் மூலம், உனது தந்தை நரக லோகத்தில் நரக வேதனையில் இருந்து விடுபட்டு விஷ்ணு லோகம் செல்வார். மேலும், உனது வம்சத்தவர் அனைவரும் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்று பல ஆண்டுகள் பூமியில் வாழ்ந்த பின்னர் நேரடியாக விஷ்ணு லோகம் செல்வர், மோக்ஷத்தை அடைவர் என்று கூறி ஆசி வழங்குகிறார்...
இதனைக் கேட்டு மகிழ்ந்த வைகானஸா மன்னர், முனிவரை வணங்கி அவரிடம் விடைபெற்று தனது அரண்மனைக்கு வந்து ம்ருகசீர்ஷ மாதத்தில் சுக்ல பட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து தனது தந்தைக்கு மோக்ஷம் அளித்தார். அவரது குடும்பத்தார் அனைவரும் பல ஆண்டுகள் அனைத்து செல்வங்களுடனும் பூமியில் வாழ்ந்து அதன் பின்னர் மோக்ஷத்தை அடைந்தனர்...
2. கைசிக மஹாத்மியம் - வராஹ புராண விளக்கம்:
கைசிக ஏகாதசி என்று பெயர் வரக்காரணம் என்ன ?
'கைசிக மஹாத்மியம்' என்பது பற்றி மட்டுமே, தனியாக ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும். அந்த அளவுக்கு அதில் பொருளும் உள்ளது, நேரமும் தேவை. இருப்பினும், இந்த இடத்தில் எவ்வளவு சுருக்கமாக, கருப்பொருளை மட்டும் கூற முடியுமோ அதனை மட்டும் இங்கு கூற முயற்சிக்கின்றோம்...
உப புராணங்களில் ஒன்றான 'வராஹ புராணத்தில்' 48-வது அத்யாயம் 'கைசிக புராணம்'; வராஹ மூர்த்தியே, பூமாதேவி தாயாரிடம் கூறியதாக உள்ள புராண விளக்கம் இதோ ...
தத்த ஸித்தாச்ரமே பத்ரே சண்டால: க்ருதநிச்சய:
தூராத் ஜாகரணே காதி மம பக்த்யா வ்யவஸ்தித:
எம்பெருமான், பிராட்டியிடம், முன்பு நீயும், நானும் குறுங்குடியாக (திருக்குறுங்குடி / Tirukkurungudi ) இருந்த ஆஸ்ரமத்தில், வசித்து வந்தோம். அந்த காலத்தில், பாணர் குலத்தில் பிறந்த ஒருவன் நாம் திருப்பள்ளி எழ வேண்டும் என்று வெகு தொலைவில் இருந்து வந்து பக்தியுடன் ப்ரஹ்ம முகூர்த்தத்தில் கோவிலுக்கு வெளியே தூரத்திலே நின்று பாடுவதை வழக்கமாக வைத்திருந்தான்.
இப்படியாக பாடுவதை அவன் பல ஆண்டுகளாக தொடர்ந்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி செய்து வந்தான்... இவ்வாறு பாடுவதை ஒட்டி அவனது பெயர் 'நம்பாடுவான்' என்றே அழைக்கப்படுகிறது.
இவ்வாறு இருக்கையில், ஒரு கார்த்திகை மாத சுக்ல பக்ஷ ஏகாதசி விரதத்திற்கு பிறகு, அன்று இரவு, துவாதசி திதி அதிகாலையில் தனது கையில் வீணையுடன் திருப்பள்ளி எழச்செய்ய புறப்பட்டான்...
அவன் வரும் வழியில், ஒரு ப்ரம்ம ராட்சஸன் தோன்றி, அவனை உணவாக உட்கொள்ள முற்பட்டான். ஆனால், நம்பாடுவானோ அந்த ப்ரம்ம ராட்சஸனிடம் வேண்டி, தொடர்ந்து தான் செய்து வரும் திருப்பள்ளியெழுச்சியை இன்றும் செய்து விட்டு வந்து விடுகிறேன், அதன் பின்னர் நீ என்னை உணவாக எடுத்துக்கொள் என்று கூறுகிறான்...
முதலில் ஒத்துக்கொள்ளாத ப்ரம்ம ராட்சஸன், பின்னர் நம்பாடுவான் பல்வேறு தண்டனை விவரங்களை கூறி நான் திரும்ப வராவிட்டால், இவை அத்தனையும் எனக்கு கிடைக்கும், இன்று ஒரு நாள் சென்று 'ஜாகரவ்ரதம்' முடித்துவிட்டு வர எனக்கு அனுமதி கொடு என்று வேண்டுகிறான். ('ஜாகரவ்ரதம்' என்றால் திருப்பள்ளியெழுச்சி செய்தல் என்று பொருள்)...
அவனது தெளிவான வாக்குறுதியை கேட்ட பின், அந்த ப்ரம்ம ராட்சஸனும், நம்பாடுவானை கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வருமாறு அனுப்பி விடுகிறான்...
அதன் பின்னர், வழக்கம் போல தனது திருப்பள்ளியெழுச்சி பாடலை முடித்து, மன நிம்மதியுடன் மீண்டும் ப்ரம்ம ராட்சஸனை நோக்கி சென்றான்.
யந்மயா பச்சிமம் கீதம் ஸ்வரம் கைசிகம் உத்தமம்
பலேந தஸ்ய பத்ரம் தே மோக்ஷ யிஷ்யாமி கில்பிஷாத்
இன்று இராத்திரி 'கைசிகம்' என்றொரு பண்ணைப்பாடினேன். அந்த கீத பலன் காரணமாக, உனது ராட்சஸ பிறவியில் இருந்து விடுபட்டு 'மோக்ஷ ப்ராப்தி' அடைவாய் என்று நம்பாடுவான் தனது பாடலின் ராக பலனை மட்டும் தானம் செய்து, அந்த ப்ரம்ம ராட்சஸனுக்கு மோக்ஷம் வழங்கினான்...
யஸ்து காயதி பக்த்யா வை கைசிகம் மம ஸம்ஸதி
ஸ தாரயதி துர்காணி ச்வபாகோ ராக்ஷஸம் யதா
வராஹப்பெருமாள் பூமாதேவியிடம், யார் ஒருவன் நம் முன் பக்தியுடன் வந்து இந்த நாளில் 'கைசிகம்' என்ற இராகத்தை இசைக்கிறானோ அவன், ப்ரம்ம ராட்சஸனுக்கு மோக்ஷம் வழங்கிய நம்பாடுவான் போன்று தன்னை நாடியவர்களை காக்கும் வல்லமை பெறுகிறான் என்று கூறுகிறார்...
இன்றும், திருக்குறுங்குடி, திருவரங்கம், திருமலை மற்றும் இதர திவ்ய தேசங்களில் 'கைசிக ஏகாதசி /கைசிக துவாதசி' மிகச்சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில், நாங்குநேரி தாலுகாவில், 'திருக்குறுங்குடியில்', அமைந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவ நம்பிக்கு சிறப்பாக திருமஞ்சனம் செய்யப்படும்; (108 திவ்ய தேசங்களில் ஒன்று);
(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கோவில் தொலைவு அறிய இதோ Google Map உங்களுக்காக)...
திருவரங்கத்தில்,
நம்பெருமாளுக்கு கைசிக ஏகாதசி அன்று, திருமஞ்சனம் செய்யப்பட்டு, இரவு 9 மணிக்கு மேல், அர்ஜுன மண்டபத்தில் வைத்து உற்சவம் நடைபெறும். பராசர பட்டர் வம்சத்தில் வந்த ஆச்சார்ய ஸ்வாமிகள், 'கைசிக புராணம்' வாசிப்பார். பின்னர், கைசிக துவாதசி அன்று காலை அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 05:45 மணிக்கு மேல்படியேறி யதாஷ்டானம் சென்று சேர்வார். அந்த நேரத்தில் 'பச்சைக்கற்பூரம்' பொடியினை நன்றாக தூவி விடுவார்கள். அந்த நேரத்தில், அந்த இடம் முழுவதும் மிகுந்த நறுமணத்தோடு தேவலோகம் போல் இருக்கும். இதற்கு 'கற்பூர படியேற்ற ஸேவை' என்று பெயர்...
ஸ்ரீ கிருஷ்ணர், பார்த்தனுக்கு 'கீதோபதேசம்' செய்தது குருஷேத்திரத்தில் வைத்து என்று நம் அனைவருக்கும் தெரியும்.
அது எந்த நாள் தெரியுமா ? இது போன்ற ஒரு கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று தான்... (மோக்ஷ ஏகாதசி தினத்தன்று...)
மஹாபாரதத்தில் 'குருஷேத்ரம்' என்று குறிப்பிடப்பட்ட இடம் தற்போது, 'ஜ்யோதிசர்' , குருஷேத்ரா மாவட்டம், ஹரியானா மாநிலம் ஆகும். (Jyotisar, Kurukshetra District, Haryana, India) இங்கு பல ஆண்டுகளாக, பகவத் கீதை தோன்றிய தினம் 'கீதா ஜயந்தி' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது...
இருப்பினும், கடந்த 2016-ம் ஆண்டு முதல் தான், 'International Gita Mahotsav' என்ற பெயரில் 5 நாட்கள் திருவிழாவாக ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 2019-ம் வருடம் 23 நவம்பர் முதல் 10 டிசம்பர் வரை 18 நாட்கள் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப் பட்டு வருகிறது... (18 நாட்கள் குருக்ஷேத்திர போர் நடைபெற்றதை நினைவு படுத்தும் வகையில்)...ஒவ்வொரு வருடமும் இந்த குறிப்பிட்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு ஆங்கில தேதி மாறுபடும்...
- வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம்.
- வாய்ப்பு இருப்பவர்கள், திருக்குறுங்குடி / திருவரங்கம் அல்லது அருகில் உள்ள திவ்ய தேசம் சென்று பெருமாளை ஸேவிக்கலாம்.
- வாய்ப்பு இருப்பவர்கள், மோக்ஷ ஏகாதசி அன்று பகவத் கீதை (குறைந்தது இரண்டு பக்கமாவது) படிக்கலாம். இரண்டு நபர்களுக்காவது பகவத் கீதை வாங்கி கொடுக்கலாம்...
- மோக்ஷ துவாதசி அன்று 'கைசிக புராணம்' படிக்கலாம்.
- வாய்ப்பு இருப்பவர்கள், பச்சைக்கற்பூரம் வாங்கி பெருமாள் கோவிலுக்கு கொடுக்கலாம்.
- வாய்ப்பு இருப்பவர்கள், பெருமாளுக்கு துளசி மாலை சாற்றலாம்.
- இவை எல்லாவற்றையுமோ அல்லது முடிந்த ஏதேனும் ஒன்றையோ செய்யலாம். இதில் எதுவுமே முடியவில்லை என்றால், இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...
Editors Note:
(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook etc, etc...} ஒவ்வொரு ஏகாதசிக்கும் முதல் நாள் தசமி திதி அன்று 'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)
'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்.....
ஹரி ஓம்...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி.
#MokshaEkadasi
#KaisigaEkadasi
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
Aaha peruvella anmeegam
ReplyDelete