கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை...
நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலம் திருவண்ணாமலை. இது அனைத்து உயிர்களுக்கும் பக்குவத்தைத் தந்து மேலான வீடுபேற்றினைக் கொடுக்கக் கூடியது.
‘நான் இந்த உடம்பே’, என்ற அறியாமையால் தன்னை இறைவனிடமிருந்து வேறுபடுத்தி உயிர்கள் பிறவிச் சுழலில் உழல்கின்றன. ‘எங்கும் நிறைந்த பரம்பொருளே நாம்’, என்று அனுபவத்தில் உணர்த்தி அதில் நிலை நிறுத்துவதே பல்வேறு சமயங்களின் மற்றும் தத்துவங்களின் நோக்கமாகும்.
இந்திய சமய, சமுதாய, கலாச்சாரங்கள் அனைத்தும் இதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது தமிழ் பழமொழியாகும்.
கலைகளின் கூடங்களாகக் கோயில்கள் விளங்குகின்றன. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது இதனை நினைவுறுத்தும்.
இந்த உடலானது பஞ்சபூதங்களால் ஆனது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்’ என்று இறைவனது இருப்பிடமாக உடல் கருதப்படுகிறது. இதனை நினைவூட்டவே, திருவண்ணாமலை (அக்னி) காளஹஸ்தி (காற்று) சிதம்பரம் (ஆகாசம்) காஞ்சி மற்றும் திருவாரூர் (மண்) திருச்சி (நீர்) ஆகிய நகரங்களில் பிரமாண்டமான ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் திருவண்ணாமலை, 'நெருப்பு' அதாவது 'ஞான அக்னி'யாக விளங்குகிறது.
ஞானத் தபோதனரை வா! என அழைக்கும் மலை அண்ணாமலை. தேவாரமும் இதனை ‘ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் ஊனத் திரளை நீக்கும் அதுவும் உண்மை பொருள் போலும்’ என்று புலப்படுத்துகிறது. தன்னை மறந்து தனுவே (இந்த உடம்பே) தானாக எண்ணி எண்ணற்ற பிறவிகள் எடுத்து உழலும் ஜீவர்களைக் கடைத்தேற்றவே அண்ணாமலை, ஆலயம் மற்றும் அதன் திருவிழாக்கள் ஏற்பட்டுள்ளன.
அருணாச்சல மகிமை: (திருவண்ணாமலை மகிமை)
சிதம்பரத்தை தரிசிக்க முக்தி ; காசியில் இறக்க முக்தி ; திருவாரூரில் பிறக்க முக்தி; ஆனால் ‘அருணாச்சலத்தை' நினைக்க முக்தி.
கிரி வடிவான இந்த லிங்கம் அண்ணாமலை என்று பெயர் பெற்றதாம். வணங்கிய பக்தர்களைக் காப்பவரும், எண்ணிய உடனேயே பாவங்களைப் போக்குபவருமான அருணாச்சலேஸ்வரது பஜனம் அளவற்ற புண்ணியங்களைத் தருவதாகும். அவரைப் போற்றிப் பயன் அடைவாயாக!’ என்று ஸ்காந்த புராணத்தில் கெளதம ரிஷி, பார்வதிக்கு உபதேசம் செய்கிறார்.
அருணாச்சல மகத்துவத்தை ஸ்காந்த மகாபுராணம், சிவரகஸ்யம், சிவபக்த விலாசம், சிவமகா புராணம் மற்றும் பல்வேறு வடமொழி நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
தமிழில் சைவ எல்லப்ப நாவலர் 649 பாடல்களில் அருணாச்சல மகிமையை வெளிப்படுத்துகிறார்.
திருவண்ணாமலையின் முக்கிய திருவிழாவாகிய கார்த்திகை தீப உற்சவ சமயத்தில் இந்த நூல்களில் காணப்பட்ட விஷயங்களில் சிலவற்றை மனனம் செய்து மரணமில்லா பெருவாழ்வு பெற்று நாமும் நித்திய அனந்த நிலையினை அடைவோமாக!
என்றுமே பதினாறு வயது உடைய மார்க்கண்டேய முனிவர், பல முனிவர்கள் சூழ, நந்தி தேவரை வணங்கி, “சுவாமி! நாங்கள் பேரின்பத்தை அடைவதற்கு தக்க வழியினை உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.
‘பூவுலகில் உள்ள புண்ணியத் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தவுடன் பேரின்ப முக்தியைத் தர வல்லது; இதில் தேவர்களும் மகத்தாகிய தபசிகளும் முக்தியை அடைந்துள்ளனர். இத்தலத்தில் உள்ள மலை லிங்க சொரூபமாகப் பிரகாசித்துக் கொண்டுள்ளது.’
‘இதன் கிழக்கே இந்திரனும், தெற்கில் உள்ள தேளிர் மலையில் யமனும், தண்டமலையில் (தண்டராம்பட்டு) வருணனும், வடக்கே குபேரனும் மற்ற நான்கு திக்குகளில் அந்தந்த திக்பாலர்களும் அண்ணாமலையாரைத் தோத்திரம் செய்து வருகின்றனர்’ என நந்தி கூறினார்.
கார்த்திகை தீபம்:
சர்வ சம்ஹார (ஊழிக்) காலத்தில், எல்லா உயிர்களும் ஒடுங்கின. பின், மறுபடியும் உலகம் உண்டாக வேண்டும் என்று பரம்பொருள் எண்ணம் கொண்டது. உடனே சக்தித் தத்துவமும், ஐந்தொழில்களை இயற்ற பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் முதலிய ஐவரும் முன்பு ஒடுக்கிய முறையிலேயே வெளிப்பட்டனர்.
இவர்களுள் பிரம்மாவானவர் தன்னால் உலகங்கள் படைக்கப்படுவதால்; ‘தானே பரம்பொருள்’ என அகங்காரம் கொண்டார். எனவே விஷ்ணுவிடம் சென்று ‘நான் உயிர்களைப் படைக்காவிட்டால் உனக்குத் தொழில் எது? எனவே, "நான்" தான் பரம்பொருள்’ என்று வாதிடத் தொடங்கினார்.
விஷ்ணுவானவர், ‘என்னிடத்தில் பிறந்த நீ முன்பு பரமன் (சிவன்) உனது ஐந்து தலைகளில் ஒன்றை அறுத்தபோது அதைப் படைத்துக் கொள்ளத் திறமை அற்றவன் ஆனாய்; நீயோ பரம்பொருள்?’ என்று ஏளனம் செய்தார்.
இவர்களது வாதம் அண்ட சராசரங்களும் வெடிக்கும் அளவுக்குச் சண்டையாக முற்றியது. மற்ற தேவர்கள் இதைப் பற்றிப் பரமனிடம் முறையிட்டனர். உடனே அவர்கள் இருவரின் மத்தியில் பரம்பொருள் பெரும் தூண் போன்ற ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். அந்த ஜோதியின் அடி முடிகளைக் காண்பவரே பெரியவர் என பிரம்மாவும், விஷ்ணுவும் உடன்பாடு செய்து கொண்டனர்.
விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து ஜோதியின் அடியைக் காண முயன்று, முடியாமல் பரம்பொருளைச் சரணடைந்தார். பிரம்மா அன்னப் பட்சியாக ஆகாயத்தில் பறந்து ஜோதியின் முடியைக் காண முயன்று, முடியாமல் பரமனின் சிகையில் இருந்து உதிர்ந்த தாழம்பூவின் பொய் சாட்சியுடன் தான் முடியைக் கண்டதாக விஷ்ணுவிடம் வாதிடவும் ஜோதிப் பிழம்பில் இருந்து வெளிப்பட்ட பரமன் பிரம்மனுக்குச் சாபமும், விஷ்ணுவுக்கு அனுக்கிரகமும் புரிந்தார்.
நான் பெரியவன் என்ற எண்ணம் கொள்ளும் அனைவரும் தங்கள் அகங்காரத்தால் அல்லல்பட வேண்டியதுதான் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த ஜோதி ஸ்வரூபம் பூமியில் நிலைகொள்ள வேண்டும் என்று தேவர்கள் விரும்பினர். எனவே பரம்பொருளிடம் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
பரமனும், ‘கார்த்திகைக்குக் கார்த்திகை நாள், ஒரு ஜோதி மலை நுனியில் காட்டி நிற்போம்';
வாய்த்த அந்தச் சுடர் காண்போர் பசிப்பிணி அல்லாது உலகில் வாழ்வர்;
இது பணிந்தோர், கண்டோர் கோத்திரத்தில் அருபத்தியோர் தலைமுறைக்கு முக்திவரம் கொடுப்போம்’ எனவும்;
‘ஜோதி மலையாகிய இந்த அருணாச்சலத்தை ஒருமுறை நினைத்தாலும் மூன்று கோடி நமச்சிவாய மந்திர ஜப பலனைப் பெறுவர்’ என்றும் கூறி பரமசிவன் அருள் புரிந்தார்.
ரமண பகவான் காட்டும் அண்ணாமலையின் சிறப்பு:
பகவான் ரமண மகரிஷிகள் சிறுவயது முதல் அருணாச்சல புராணம் விளங்கப் பெற்று மரணானுபவத்தின் மூலம் மரணம் இல்லாப் பெரு வாழ்வு அடைந்து அருணாச்சலத்தில் தனது தேகவாழ்வை மையமாகக் கொண்டு அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வழிவகுத்துள்ளார்.
அருணாச்சல-ஜோதி தத்துவங்கள் அவரது நூல் திரட்டில் முதல் இரண்டு பாடல்களாக வடிக்கப்பட்டு உள்ளன.
புத்தி அகங்காரம் புலம்எய்த ஓங்கும்...
மத்தி இதயம்தான் மறையவனும் மாலும்...
நத்த அறியாது நலம்குலைய அன்னார்...
மத்தி ஒளிர் அண்ணாமலையினது மெய்யே...
தகவல் உதவி நன்றி: ரமண மகரிஷி இணைய தளங்கள்
மத்தி இதயம்தான் மறையவனும் மாலும்...
நத்த அறியாது நலம்குலைய அன்னார்...
மத்தி ஒளிர் அண்ணாமலையினது மெய்யே...
தகவல் உதவி நன்றி: ரமண மகரிஷி இணைய தளங்கள்
Editors Note:
நமது ஹிந்து சனாதன தர்மத்தில் ஒவ்வொரு உற்சவமும், திருவிழாவும், பண்டிகைகளும் நமது ஆன்மீக எண்ணத்தை உயர்த்தும் நோக்கிலும், நமது மனம் தெளிவுற வேண்டியுமே வடிவமைக்கப்பட்டுள்ளது...
அந்த வகையில், கார்த்திகை தீபத் திருநாளின் உள் அர்த்தம் பற்றி, இந்த 'சிறியவன்' புரிந்து கொண்டது என்னவென்றால்;
இது சிவன் பெரிதா, விஷ்ணு பெரிதா, பிரம்மன் பெரிதா என்ற கேள்வியால் வந்தது அல்ல?... இது அவர்கள் எல்லாரும் சேர்ந்து மானிடப்பிறவியாகிய நமக்கு உண்மையை உணர்த்த புரிந்த நாடகம் என்பதனை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்...
இது சிவன் பெரிதா, விஷ்ணு பெரிதா, பிரம்மன் பெரிதா என்ற கேள்வியால் வந்தது அல்ல?... இது அவர்கள் எல்லாரும் சேர்ந்து மானிடப்பிறவியாகிய நமக்கு உண்மையை உணர்த்த புரிந்த நாடகம் என்பதனை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்...
அக(ல்) விளக்கு ஏற்றி, "நான்" எனும் அகந்தையை "திரியாக்கி" நமது மெய்யே (உடலே) பொய் தான் என்பதை உணர்ந்து, அந்த "நல்ல எண்ணத்தையே", "நல்ல எண்ணெய்" ஆக்கி, "அறிவு தெளிவாகி", அதனையே "தீக்குச்சியாக்கி" தீபத்தினை ஏற்றினால், எரியும் அந்த ' தீப ஜோதி ' தான், உண்மையில் நமது அக இருள் அகற்றும் "ஞான தீபம்" அதுவே 'கார்த்திகை தீபம்' ஆகும்.
மொத்தத்தில்,
'அகல்' விளக்கு ஏற்றுவது மட்டும் அல்ல, கார்த்திகை தீபம்...
'அகத்தில்' (உள்ளத்தில்) விளக்கு ஏற்றுவதே கார்த்திகை தீபம் ஆகும்...
'அகல்' விளக்கு ஏற்றுவது மட்டும் அல்ல, கார்த்திகை தீபம்...
'அகத்தில்' (உள்ளத்தில்) விளக்கு ஏற்றுவதே கார்த்திகை தீபம் ஆகும்...
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ...
அண்ணாமலையாருக்கு அரோஹரா...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
நன்றி ...
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Comments
Post a Comment