"தாம்ரபர்ணீ " யின் வரலாறு :
சிவ - பார்வதி திருமண வைபவத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கயிலை மலைக்கு வந்ததால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்படும்போது, உமையவள் அகத்தியரிடம், தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க, அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.
ஆனால், உண்மையில் அது வெறும் முத்தாரம் மட்டும்தானா..???
இல்லை.... பெண் எனப் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே அந்த ஆரமாகி, அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்துகொண்டிருந்தன! அந்த முத்தாரம் அம்பிகையிடம் வந்து சேர்ந்த கதைதான் என்ன..?
சிவபெருமானின் தேவியான பார்வதிதேவி லலிதை என்னும் ஞானசக்தியாகத் திகழ, இச்சா மற்றும் கிரியாசக்திகள் ஞானசக்தியாகிய லலிதைக்குப் பணிவிடை செய்தனர்.
அதனால், மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம், 'வேண்டும் வரம் கேளுங்கள்’ என்று கூறினர்.
அதற்கு அவர்கள், ''தேவி, தாங்கள் நாராயணனாக வந்து எங்களை மணந்துகொள்ளவேண்டும்'' என்று கூறினர்.
தன்னில் சரிபாதியை தனக்குத் தந்த தன்னுடைய நாயகனைப் பிரிய மனமில்லாத தேவி, அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நாரணியாகவும், நாராயணனாகவும் வடிவெடுத்தாள்.
நாரணியாகத் தன் நாயகனிடம் இருந்துகொண்டு, நாராயணனாக அவர்கள் இருவரையும் மணந்துகொண்டாள்.
தம்முடன் இருந்த நாரணியுடன் ஈசன் நதிநீர்விளையாட்டில் விருப்பம் கொண்டவராக நீராடச் செல்ல, அப்போது நதியின் சில நீர்த்துளிகள் அம்பிகையின் திருமார்பில் இருந்த குங்குமத்துடன் கலந்து தாமிர நிறம் பெற்று முத்துக்களாக மாறியது.
அம்பிகை அந்த முத்துக்களைச் சேர்த்து ஆரமாக்கி அணிந்து கொண்டாள். நாரணியாகத் தோன்றியதற்கான அவசியம் முடிந்ததும், அந்த முத்துமாலை ஸ்ரீபுர நாயகியான பராசக்தியிடம் சேர்ந்துவிட்டது.
சிலகாலம் சென்றது.
தாட்ஷாயணியாக அவதரித்து சிவபெருமானை மணந்திருந்த நிலையில், தன் நாயகனை மதிக்காமல் தன் தந்தை நடத்திய யாகத்தைத் தடுக்கச் சென்றவள், அது முடியாமல் போகவே பிராணத் தியாகம் செய்துகொண்டாள்.
பின்னர், ஹிமவானின் மகளாகத் தோன்றி, இமவதி, பார்வதி என்ற பெயர்களைப் பெற்று, சிவபெருமானை மணம் செய்துகொள்ள விரும்பினாள்.
அதற்காக எந்த சக்தியின் அம்சமாகத் தோன்றினாளோ அந்த பராசக்தியைக் குறித்து தவம் இயற்றினாள்.
பராசக்தியும், தன் அம்சமான தேவியை ஆசீர்வதித்து, தான் அணிந்திருந்த முத்துமாலையையும் பார்வதிக்கு கொடுத்து அருளினாள்.
அந்த முத்தாரத்தைத்தான் தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியரிடம் பார்வதிதேவி வழங்கினாள். ஈச்வர சங்கல்ப படி, அகத்தியர் அந்த முத்துமாலையைக் கையில் வாங்கிவர அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது....
அதே வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் "தாம்ரபர்ணீ " என்று போற்றிக் கொண்டாடினர்...
பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், "தாம்ரபர்ணீ " தேவியானவள் 'பெண் உருவம் கொண்ட நதி என்றும், உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்’ என்றும் கூறி, அவளையும் நதியுருவாக்கி கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
கயிலை நாயகனின் கல்யாணக் கோலம் தரிசிக்கப் பெற்று உள்ளம் மகிழ்ந்தார்.
மகிழ்ச்சியான அந்த மனநிலையில், உலகைச் செழுமைப்படுத்த திருவுள்ளம் கொண்ட அகத்திய முனிவர், வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில் இருந்த "தாம்ரபர்ணீ " நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார்...
பொதிகை மலை / அகத்தியர் மலை |
அகத்திய முனிவர் மூலம் தோன்றிய நதிகள் இரண்டு... ஒன்று காவேரி, மற்றொன்று "தாம்ரபர்ணீ"...
விநாயகப்பெருமான் காக வடிவம் கொண்டு அகத்தியரது கமண்டலத்தை தட்டி விழச்செய்து அதன் மூலம் "காவேரி" தேவி பெருகி ஓடும்படி செய்தார்... ஆனால், "தாம்ரபர்ணீ " தேவி அகத்தியரின் உள்ளம் மகிழ்ந்து இருந்த வேளையில் ஈஸ்வர சங்கல்பத்தின் படி பிரவாகம் எடுக்கும் படி அமையப்பெற்றது...
விநாயகப்பெருமான் காக வடிவம் கொண்டு அகத்தியரது கமண்டலத்தை தட்டி விழச்செய்து அதன் மூலம் "காவேரி" தேவி பெருகி ஓடும்படி செய்தார்... ஆனால், "தாம்ரபர்ணீ " தேவி அகத்தியரின் உள்ளம் மகிழ்ந்து இருந்த வேளையில் ஈஸ்வர சங்கல்பத்தின் படி பிரவாகம் எடுக்கும் படி அமையப்பெற்றது...
அதனால், "தாம்ரபர்ணீ " தேவிக்கு சற்றே வளம் கூடுதல் என்று சொல்லலாம் ...
இது தான் தாமிரபரணியின் சிலிர்ப்பூட்டும்
வரலாறு….
"தாம்ரபர்ணீ " தேவியின் பெருமைகள் தொடரும் ...
ஓம் நம ஷிவாய ...
Comments
Post a Comment