ஹிந்து மதத்தின் தனிச்சிறப்பு: (ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் உரையில் இருந்து) வைதிக மதம்: நம் மதத்தின் தனி அம்சங்கள்: மற்ற மதங்களில் இல்லாத பல அம்சங்கள் நம் மதத்தில் இருக்கின்றன. அதில் ஒன்று. கர்மக் கொள்கை, Karma Theory என்று சொல்கிறார்கள். நம் மதத்திலிருந்து வந்த பௌத்தம், சமணம் போன்ற மதங்கள் இதை ஒப்புக் கொண்டாலும் ஏனைய மதங்களில் இந்தக் கொள்கை இல்லை. கர்மா தியரி என்றால் என்ன? எந்தச் செயலுக்கும் பிரதியாக ஒரு விளைவு உண்டு. Cause of effect என்பதாகவும், action and reaction என்பதாகவும், இவை தவிர்க்க முடியாத விதிகளாக இருக்கின்றன என்று ஃபிஸிக்ஸில் (Physics) சொல்கிறார்கள். பௌதிகத்தில் சொல்வதையே மநுஷ்ய வாழ்க்கைக்கும் பொருத்தி கர்மக் கொள்கையை நம் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஜடமான பூதங்கள் போலவே சைதன்யம் என்ற அறிவுள்ள ஜீவன்களும் அடக்கம். இவை ஒன்று சேர்ந்துதான் லோக வாழ்வு. எனவே, ஒன்றுக்கும் இருக்கிற நியதி, தர்மம் இன்னொன்றுக்கும் இருக்கத்தான் வேண்டும். மனிதனின் ஒவ்வொரு கர்மாவிற்கும் விளைவாக ஒரு பலன் உண்டாகித்தான் தீர வேண்டும் என்பதே Karma Theory. பாப கர்மம் செய்தால் அதற்காக தண்டனையை மன...