வாழ்க வளமுடன் !!!
4-வது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி ஜன.25ல் தொடக்கம்:
சென்னை : உலக கலாசார இணக்க மையத்தின் ஆதரவுடன் (ஜி.எப்.சி.எச்.) இந்து ஆன்மிக, சேவை மையம் நடத்தும் நான்காவது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி புதன்கிழமை (ஜன. 25) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆதி சுஞ்சனகிரி மடத்தின் தலைவர் சுவாமி நிர்மலானந்தானந்தர் தொடங்கி வைக்கிறார். கோவை கௌமார மடம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை செயலர் எம். ராஜாராம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.
இது குறித்து கண்காட்சி அமைப்புக் குழுவின் தலைவரும், டி.என்.பி.எஸ்.சி. தலைவருமான ஆர். நடராஜ், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: உலகில் உள்ள அனைத்து மதங்களும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. இந்து அமைப்புகள், மடங்கள், கோயில்கள் ஆண்டாண்டு காலமாக செய்து வரும் சமுதாயப் பணிகளை பொதுமக்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் 4-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
முதல் முதலாக 2009-ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 60 அமைப்புகளும், 2010, 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கண்காட்சியில் 100-க்கும் அதிகமான அமைப்புகள் அரங்குகளை அமைத்திருந்தன.
4-வது ஆண்டாக நடைபெறும் புதன்கிழமை தொடங்கும் கண்காட்சியில், திருப்பதி திருமலை தேவஸ்தானம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை, ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத் துறை, ஸ்ரீராமகிருஷ்ண மடம், சின்மயா மிஷன், மாதா அமிர்தானந்தமயி மடம், காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி மடம், ஈஷா ஃபவுண்டேஷன், வேலூர் நாராயணி பீடம், பிரம்மகுமாரிகள் அமைப்பு, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, சுவாமி தயானந்த சரஸ்வதியின் தர்ம ரக்ஷண சமிதி, விவேகானந்த கேந்திரம், சேவாபாரதி, வித்யாபாரதி, சம்ஸ்க்ருத பாரதி, ராஷ்ட்ர சேவிகா சமிதி, ஆந்திர மகிளா சபா, இந்து மிஷன் மருத்துவமனை, அகில இந்திய சாய் சமாஜம், பாரத் விகாஸ் பரிஷத், அமர் சேவா சங்கம்,கோவிலூர் மடாலயம், பேரூர் சாந்தலிங்க அடிகளார் திருமடம், நாடார் மகாஜனசங்கம் உள்பட 160-க்கும் அதிகமான இந்து ஆன்மிக, சேவை அமைப்புகள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.
ஒவ்வொரு அமைப்பும் தாங்கள் செய்து வரும் சேவைப் பணிகளை அரங்கில் காட்சிக்கு வைத்திருப்பார்கள். ஆன்மிகம், சேவை தொடர்பான புத்தகங்கள், வெளியீடுகள், குறுந்தகடுகள், கைவினைப் பொருள்களும் கண்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கும். கண்காட்சி நடைபெறும் நாள்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பத்மா சுப்பிரமணியத்தின் திருப்பாவை நாட்டிய நிகழ்ச்சி, சுப்பு ஆறுமுகத்தின் ஒளவையார் வில்லுப்பாட்டு ஆகியவற்றுடன் கதக்களி, குச்சுப்புடி, பரதநாட்டிம் போன்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. ஜனவரி 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாள்களுக்கு நடைபெறும் கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்றார் ஆர். நடராஜ்.
Thanks to Dinamani.
Comments
Post a Comment